நாட்டின் நிலப்பரப்பை ராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் வகையில் பாம்பன் கடலின் மீது 1914-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த பாலம் வழுவிழந்த நிலையில் புதிய பாலம் அமைக்க ரயில்வே வாரியம் முடிவுசெய்தது. இதற்கான பணிகள் கடந்த 2018- ஆம் ஆண்டு துவங்கியது. ரயில்வேயின் பொதுத்துறை நிறுவனமான ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் மூலம் கட்டப்பட்டு வரும் இந்த புதிய பாலத்தின் நடுவே 72.5 மீட்டர் லிஃப்டிங் கிர்டர் செங்குத்தாக மின் இயந்திரவியல் சக்தி மூலம் திறந்து கப்பல்களுக்கு வழிவிடும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.
பழைய பாலம் இருபுறமும் ஐந்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் மனித ஆற்றல் மூலம் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய பாலம் செங்குத்தாக திறக்கப்படும் இந்தியாவின் முதல் பாலமாக அமைய உள்ளது. பெரிய கப்பல்கள் சென்று வரும் வகையில் நடுவில் உள்ள லிஃப்டிங் கிர்டர் 17 மீட்டர் உயரத்திற்கு மேலே செல்லும். இது அருகிலுள்ள சாலை பாலத்திற்கு இணையான உயரம் ஆகும்.
கடலில் 333 கான்கிரிட் அடித்தளங்கள், 101 கான்கிரிட் தூண்கள் ஆகியவற்றின் மேல் எதிர்காலத் தேவையை கருத்தில் கொண்டு இரட்டை ரயில் பாதை அமைக்கும் வகையில் அடித்தளமும் தூண்களும் அகலமாக அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போதைய தேவையை கருத்தில் கொண்டு ஒரு ரயில் பாதை மட்டுமே அமைக்கப்படுகிறது. மேலும் ரயில்களை மின்சாரம் மூலம் இயக்கும் வகையில் மின் மயமாக்கல் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இப்புதிய பாலத்தில் 90 சதவிகித பணிகள் நிறைவடைந்த நிலையில், அதில் இரட்டை இன்ஜினுடன் கூடிய சரக்கு ரயில் இயக்கப்பட்டது. இந்த சோதனை ஓட்டத்தின் போது சுமார் 1,100 டன் எடையுடன் கூடிய 11 சரக்கு ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு சோதனை ஓட்டம் இன்று காலை வெற்றிகரமாக நடந்தது. புதிய ரயில் பாலம் தொடக்கப்பகுதியில் இருந்து சின்னப்பாலம் ரயில்வே கேட் வரை நடத்தப்பட்ட இந்த சோதனை ஓட்டத்தின் போது மணிக்கு 20 கி.மீ வேகம் துவங்கி 60 கி.மீ வேகம் வரை ரயிலினை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த சோதனை ஓட்டத்தை பாம்பன் சாலை பாலத்தில் இருந்து ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.