புதுடெல்லி: “பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை” என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பை எதிர்த்து ‘தலித் மற்றும் ஆதிவாசி’ அமைப்புகள் இன்று (ஆக.21) நாடு தழுவிய போராட்டத்தை நடத்தி வருகின்றன. இதனால் பிஹார், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், கேரளாவில் ஆங்காங்கே மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பட்டியலினத்தவருக்கான இடஒதுக்கீட்டில், அதே சமுகத்தைச் சேர்ந்த மிகவும் பின்தங்கிய பிரிவுகளுக்கு உள்இடஒதுக்கீடு வழங்குவது தொடா்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இந்தப் போராட்டத்துக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இடதுசாரிகளும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
கேரளாவில் பந்த் நிலவரம்: கேரளாவைப் பொறுத்தவரை தேசிய தலித், ஆதிவாசி அமைப்புகள் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்படும் இன்றைய பந்த் பெரும்பாலும் அமைதியாகவே நடைபெறுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருசில இடங்களில் கண்டனப் பேரணிகளில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டனர். சில இடங்களில் போராட்டங்கள், பேரணிகளால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. மாநிலத்தில் எங்கும் கட்டாயமாக கடையடைப்பு, வன்முறைச் சம்பவங்கள் நடத்ததாகத் தகவல் இல்லை.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் பாரத் பந்த்துக்கு ஆதரவாக பேரணி மேற்கொண்ட சமூகநலக் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் பிடி வசந்தகுமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பத்தனம்திட்டாவில் தலித் அமைப்பினர் பேரணி மேற்கொண்டனர். காசர்கோடு மாவட்டத்தில் சதுஜனா பரிஷத் அமைபினர் கண்டனப் பேரணி நடத்தி கைதாகினர்.
பிஹாரில் ஆங்காங்கே போக்குவரத்து பாதிப்பு: பாரத் பந்த் எதிரொலியாக ஆங்காங்கே போக்குவரத்து பாதிப்பு மட்டுமே ஏற்பட்டதாக பிஹார் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஜெஹானாபாத் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை அப்புறப்படுத்த முயன்றபோது சிறிய தள்ளுமுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. மாதேபுரா, முசாபர்பூர் பகுதிகளில் போராட்டக்காரர்கள் போக்குவரத்தை முடக்க முயற்சித்தனர். ஆனால் பாதுகாப்புப் படையினர் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
பிஹார் மாநிலத்தில் இன்று பிஹார் காவல் துறை, ஆயுதப்படைப் பணிகளுக்கான தேர்வு பல்வேறு மாவட்டங்களிலும் நடைபெறுவதால் அவை பாதிக்கப்படாமல் இருக்கும் அளவில் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள் கூடுதல் பாதுகாப்போடு செயல்பட்டன.
இடஒதுக்கீட்டை பாதுகாக்கும் போராட்டம் – அகிலேஷ் கருத்து: இன்றைய பாரத் பந்துக்கு ஆதரவு தெரிவித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “கட்டுப்பாடற்ற அரசாங்கத்துக்கு மக்கள் இயக்கங்களின் போராட்டமே கடிவாளம். இடஒதுக்கீட்டை காக்க முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த மாபெரும் போராட்டம் ஒரு நேர்மறை முயற்சி. இது போன்ற அமைதியான போராட்டங்கள் ஜனநாயக உரிமை. இது சுரண்டப்படும் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களிடையே புதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, இடஒதுக்கீட்டில் எந்த விதமான குளறுபடிக்கும் எதிரான மக்கள் சக்தியின் கேடயமாக விளங்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
மாயாவதி ஆதரவு: இன்று நடைபெறும் நாடு தழுவிய போராட்டத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “பாரத் பந்த்-க்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளிக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பட்டியல் சமூகத்தினரின் கோபம் வலுத்துள்ளது. இது பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் இடஒதுக்கீட்டுக்கு எதிரான சதியின் எதிரொலி. இடஒதுக்கீட்டை அர்த்தமற்றதாக்கி அதனை படிப்படியாக இல்லாமல் ஆக்குவதே அவர்களின் இலக்கு” என்று இந்தி மொழியில் பதிவிட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் நிலவரம் என்ன? – ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்றைய பாதிப்பு சற்று கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். அங்கு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. சாலைகளில் பொது போக்குவரத்து வாகனங்கள் இல்லை. முதல்வர் ஹேமந்த் சோரன் கூட பலாமு செல்லும் பயணத்தை ஒத்திவைத்துள்ளார். மாநிலத்தின் ஜேஎம்எம், காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணி இந்தப் போராட்டத்துக்கு முழு ஆதரவைத் தந்துள்ளன. ஆங்காங்கே கண்டனப் பேரணிகள் நடந்து வருகின்றன.
மத்தியப் பிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு: பாரத் பந்த் நடப்பதை ஒட்டி செவ்வாய்க்கிழமை இரவே மாநில உள்துறை சார்பில் ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் உரிய நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதனால், அங்கு மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூரில் சற்றே பாதிப்பு: ராஜஸ்தானில் ஆளும் பாஜக அரசு இந்த பாரத் பந்த் அறிவிப்பை ஒட்டி முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தியது. ராஜஸ்தான் உச்ச நீதிமன்ற தீர்ப்பையும், மத்திய அரசின் முடிவையும் ஏற்கிறது என்று தெரிவித்துள்ளது. பாரத் பந்த் பொறுத்தவரை மக்களுக்குப் பாதிப்பில்லாமல் அமைதி வழியில் ராஜஸ்தானிலும் நடத்தலாம் என்று ராஜஸ்தான் அமைச்சர் தெரிவித்தார். ஜெய்ப்பூரில் மட்டும் பாரத் பந்த் பாதிப்பு உணரப்பட்டது. அங்கே தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இயல்பு நிலை சற்றே பாதிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் ரயில் சேவை பாதிப்பு: ஒடிசாவில் சாலை, ரயில் போக்குவரத்து ஆங்காங்கே பாதிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், வங்கிகள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் வழக்கம்போல் இயங்கின்றன. உள்துறை அறிவுறுத்தலின் பேரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டால் பாதிப்பு பரவலாக உணரப்படவில்லை.
இவ்வாறாக பாரத் பந்த் காரணமாக ராஜஸ்தான், உ.பி. பிஹார், கேரளா, ஒடிசா என வடக்கு, மேற்கு மாநிலங்களில் மட்டும் குறிப்பிடத்தக்க பாதிப்பும், கேரளாவில் ஓரளவு பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
வழக்கும் தீர்ப்பும்: பட்டியலினத்தில் மிகவும் பின்தங்கியோருக்கு உள்ஒதுக்கீடு வழங்க பஞ்சாப் அரசு சட்டம் கொண்டுவந்தது. அரசு வேலைவாய்ப்புகளில் பட்டியலின பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் வால்மீகி மற்றும் மழாபி சீக்கிய சமூகத்தினருக்கு 50% உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் விதமாக பஞ்சாப் மாநில அரசு கொண்டு வந்தது. இதேபோல் தமிழக அரசு 2009-ல் அருந்ததியின மக்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்து சட்டம் இயற்றியது. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.
இந்நிலையில், பஞ்சாப் அரசின் வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட 6 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பு வழங்கினர். அதேநேரம், ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். அதன்படி, 6 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், “பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை. பட்டியலினத்தில் மிகவும் பின்தங்கியோருக்கு உள்ஒதுக்கீடு வழங்க பஞ்சாப் அரசு கொண்டுவந்த சட்டம் செல்லும். அரசியல் சாசன சட்டத்தின் 14வது பிரிவை உள் ஒதுக்கீடு மீறவில்லை. பட்டியலின உட்பிரிவுகள் எதுவும் பட்டியலின வகுப்பினர் என்ற வரையறையில் இருந்து விலக்கப்படாத காரணத்தால் உள்ஒதுக்கீடு வழங்கலாம்.
எனினும், மாநிலங்கள் அதன் சொந்த விருப்பம் அல்லது அரசியல் தேவைக்காக செயல்பட முடியாது. மாநிலங்களின் முடிவு நீதித்துறை மறுஆய்வுக்கு ஏற்றது. பட்டியலின, பழங்குடியினருக்கான உள்ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும். உள் இடஒதுக்கீடு தொடர்பான மாநில அரசுகள் கொண்டுவந்த சட்டம் செல்லும்.” என்று ஒருமித்த தீர்ப்பளித்தனர்.
அதேநேரம், ஆந்திராவை சேர்ந்த இவி சின்னையா என்பவர், “மாநில அரசுகள் உள்ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது. மாநில அரசுகளுக்கு உள்ஒதுக்கீடு வழங்க அதிகாரம் இல்லை” என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, “உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை” என்று 2005-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.