பூந்தமல்லி: பூந்தமல்லி நீதிமன்றத்தில் போலீஸ்காரரை, வழக்கறிஞர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பம் தொடர்பாக வழக்கறிஞர் மீது பூந்தமல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் யோகபாலன். வழக்கறிஞரான இவர் மீது நசரத்பேட்டையில் நடந்த அடிதடி சம்பவம் தொடர்பாக நசரத்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்றுள்ள யோகபாலன், வழக்கு தொடர்பாக புதன்கிழமை அன்று பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் மாஜிஸ்திரேட் அமுதா முன்பு ஆஜராகி விட்டு வெளியே வந்தார். அப்போது, நீதிமன்ற வளாகத்தில் நின்று கொண்டிருந்த வளசரவாக்கம் காவல் நிலைய போலீஸ்காரர் பிரபாகரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் யோகபாலன். அந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், பிரபாகரனை, வழக்கறிஞர் யோகபாலன் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, பிரபாகரன் அளித்த புகாரின் பேரில் பூந்தமல்லி போலீஸார் வழக்கறிஞர் யோகபாலன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், வளசரவாக்கம் காவல் நிலைய எல்லையில் நடந்த ஒரு குற்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு ஜாமீன் கேட்டு யோகபாலன் நீதிமன்றத்தில் மனு அளித்த நிலையில், அதற்கு வளசரவாக்கம் போலீஸார் ஆட்சேபனை தெரிவித்ததால், பிரபாகரனை வழக்கறிஞர் யோகபாலன் தாக்கியதாக கூறப்படுகிறது.