பீகாரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தன்னைக் கடித்த பாம்பை, நபர் ஒருவர் திருப்பிக் கடித்தார். இதில் அந்தப் பாம்பு உயிரிழந்துவிட்டது. இந்தச் சம்பவம் அந்தச் சமயத்தில் பெரியளவில் பேசுபொருளானது. இந்த நிலையில், பீகாரில் மீண்டும் அத்தகைய சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
பீகாரின் கயா மாவட்டத்தில் உள்ளது ஜமுஹர் என்னும் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு வயது ஆண் குழந்தை, தனது வீட்டின் மாடியில் விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது அங்கு ஒரு பாம்பு வந்திருக்கிறது. அந்தப் பாம்பை விளையாட்டுப் பொருள் என நினைத்த அந்தக் குழந்தை, பாம்பைப் பிடித்து கடித்துவிட்டது. இதைக் கண்ட குழந்தையின் பெற்றோர், பதறியபடி விரைந்து தங்கள் குழந்தையைக் காப்பாற்றியிருக்கின்றனர். இந்தச் சம்பவத்தில் குழந்தை கடித்த அந்தப் பாம்பு, உயிரிழந்துவிட்டது. அதையடுத்து, உடனடியாக குழந்தையை அருகிலுள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்குக் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், முதலில் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். பின்னர், `குழந்தைக்கு எந்தப் பிரச்னையும் இல்லை… நன்றாகவே இருக்கிறது’ எனக் கூறியிருக்கின்றனர். மேலும், குழந்தை கடித்து உயிரிழந்த அந்தப் பாம்பு, மழைக்காலங்களில் தென்படக்கூடியது என்றும், அந்த அளவுக்கு விஷத்தன்மை வாய்ந்தது இல்லையென்றும் தெரிவித்திருக்கின்றனர்.