`முளைத்து மூணு இலை விடாத அண்ணாமலை… 4 எம்.எல்.ஏ-க்கள் நாங்கள் போட்ட பிச்சை!' – காட்டமான ஜெயக்குமார்

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில், கலைஞர் 100 நினைவு நாணயத்தை வெளியிட முடிவு செய்தது. அதற்காக, மத்திய அரசிடம் அனுமதி பெற்ற தி.மு.க, பா.ஜ.க-வின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ராஜ்நாத் சிங் கையாலேயே வெளியிடவைத்தது.

நாணயத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங்!

அரசியல் களத்தில் தி.மு.க-வும், பா.ஜ.க-வும் தங்களை எதிரெதிர் பக்கங்களில் நிறுத்திக்கொள்ளும் நிலையில், கூட்டணியிலிருக்கும் காங்கிரஸிலிருந்து சீனியர்களை அழைக்காமல், பா.ஜ.க அமைச்சரால் தி.மு.க நாணயம் வெளியிட்டிருப்பது தமிழக அரசியலில் விவாதப்பொருளாகியிருக்கிறது.

இதனை, தி.மு.க-வும், பா.ஜ.க-வும் ரகசிய உறவு வைத்திருப்பதாக மாநில எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டபோது, `ஒன்று அரசியல் தெரிந்திருக்க வேண்டும். இல்லையெனில் நாட்டு நடப்பு புரிந்திருக்க வேண்டும். அல்லது மூளையாவது இருக்க வேண்டும். ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டவர்கள் அவருக்காக ஓர் இரங்கல் கூட்டமாவது நடத்தியிருக்கிறார்களா?’ என்று ஸ்டாலின் சாடினார்.

ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை

அவரைத் தொடர்ந்து தமிழக பா.ஜ.க அண்ணாமலை, `அரசியல் லாபத்துக்காக பா.ஜ.க-வை எடப்பாடி குறை சொல்கிறார். எடப்பாடி பழனிசாமி பேசுவது கிணற்றுத் தவளையாக அவர் இருப்பதைக் காட்டுகிறது’ என்று தானும் இணைந்து சாடினார். இந்த நிலையில், ஸ்டாலின் மற்றும் அண்ணாமலையின் விமர்சனங்களுக்கு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எதிர்வினையாற்றியிருக்கிறார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், “நாணயம் வெளியீட்டு விழாவில், தி.மு.க-வும், பா.ஜ.க-வும் விக்ரமன் படம் குடும்ப பாசம் போல ஒட்டி உறவாடினார்கள். எல்லா நாளும் கருப்பு பேண்ட்டை போட்டுச் செல்லும் ஸ்டாலின், அன்றைக்கு சந்தன கலர் பேண்ட் போட்டுச் சென்றார். ஏனென்றால், கருப்பு பேண்ட் போட்டால் `கோ பேக் ராஜ்நாத் சிங்’ என்றாகிவிடும். பா.ஜ.க-வின் கொத்தடிமை தி.மு.க என்பதை இது நிரூபித்துவிட்டது. எனவே, தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் ரகசிய தொடர்கிறது. மேலும், கோபத்தின் வெளிப்பாடாக ஸ்டாலின் ஒருமையில் பேசுகிறார்.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

நடமாடும் கால்நடை மருத்துவ கிளினிக் விளம்பரத்தில் மோடியின் படம் போடாமல் அவருக்கு தூக்கம் வராது. இன்னொருபக்கம், முளைத்து மூணு இலை விடாத அண்ணாமலை இரட்டை இலையைப் பற்றி பேசுகிறார். ஏதோ நாங்கள் போட்ட பிச்சையால் 4 எம்.எல்.ஏ-க்கள் சட்டமன்றத்துக்குள் வந்துவிட்டார்கள். 2026-ல் தனியாக நின்று ஒரு சீட்டில் ஜெயித்துக்காட்டட்டும். சொந்தக் கால் எதுவும் இல்லாமல் பா.ஜ.க எங்களைப் பார்த்துப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. மேலும், விஜய் கொடியேற்றுவதில் தி.மு.க-வுக்கு என்ன பிரச்னை. எதற்காக நெருக்கடி கொடுக்கிறார்கள். ஜனநாயக நாட்டில் யாரும் கொடியேற்ற உரிமை இருக்கிறது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.