சென்னை: சென்னை லீலா பேலஸ் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இன்று நடைபெற்ற தமிழக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ல், ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் இரண்டு புதிய தொழிற்சாலைகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். பெருந்துறை சிப்காட் வளாகத்திலும் மற்றும் திருப்பூர் இடுவம்பாளையம் பகுதியிலும் இந்த இரண்டு தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஜனவரி 2024 சென்னை வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சார்பில் ரூ.1,000 கோடிக்கான தொழில் முதலீடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர் நாகராஜன், முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கி இருந்தார். இதன் ஒரு பகுதியாக இன்று நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின், ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் இரண்டு தொழிற்சாலைகளை காணொலி மூலமாக திறந்து வைத்தார்.
இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள இரண்டு தொழிற்சாலைகள் மூலமாக சுமார் 2,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளதாகவும், தொழில் முன்னேற்றத்தில் தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்வதற்கு ராம்ராஜ் காட்டன் தொடர்ந்து செயல்படும் என்றும் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் தெரிவித்தார்.