வங்காளதேசத்தில் 37 ஆண்டுகள் சிறைவாசம்… 62 வயதில் நாடு திரும்பிய இந்தியர்

புதுடெல்லி,

திரிபுரா மாநிலத்தில் உள்ள சேபாஹிஜாலா மாவட்டத்தில் வங்காளதேசத்தின் எல்லை அருகே அமைந்திருக்கும் ரபீந்திரநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜகான். இவர் கடந்த 1988-ம் ஆண்டு வங்காளதேசத்தின் கோமிலா பகுதியில் உள்ள தனது உறவினரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த போலீசார், எல்லைதாண்டி சட்டவிரோதமாக வங்காளதேசத்திற்குள் நுழைந்ததாக கூறி ஷாஜகானை கைது செய்தனர். அந்த சமயத்தில் ஷாஜகானுக்கு 25 வயது. அவருக்கு அந்நாட்டு கோர்ட்டு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

ஆனால் 11 ஆண்டுகளுக்குப் பிறகும் ஷாஜகான் விடுதலை செய்யப்படவில்லை. அவருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை விட கூடுதலாக 26 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துள்ளார். சமீபத்தில் ஷாஜகானின் நிலை குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், அவரை விடுதலை செய்வதற்காக சாரா பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் முயற்சி மேற்கொண்டது.

இந்த முயற்சியின் பலனாக 37 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாஜகான் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். வங்காளதேச சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அவர், இந்தியாவின் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

25 வயதில் வங்காளதேசத்திற்குச் சென்ற ஷாஜகான், தற்போது 62 வயதில் நாடு திரும்பியுள்ளார். அவர் செல்லும்போது அவரது மனைவி கர்ப்பமாக இருந்துள்ளார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஷாஜகானின் மகன் முதல் முறையாக தனது தந்தையை நேரில் சந்தித்துள்ளார்.

இது குறித்து ஷாஜகான் கூறுகையில், “நான் சிறையில் அடைக்கப்பட்ட முதல் 14 நாட்கள், போலீஸ் கஸ்டடியில் கடுமையான துன்புறுத்தலை எதிர்கொண்டேன். 11 ஆண்டுகள் கோமிலா மத்திய சிறையில் என்னை அடைத்தார்கள். அதன் பின்னர் என் மீது சுமத்தப்பட்ட பல்வேறு பொய் வழக்குகளால் கூடுதலாக 26 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தேன்.

தற்போது விடுதலை செய்யப்பட்டு நாடு திரும்பியிருக்கிறேன். என் மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. நான் சொர்க்கத்தில் இருப்பது போல் உணர்கிறேன். இது எனக்கு மறுபிறப்பு போன்றது. வாழ்நாளில் நான் பிறந்த ஊருக்கு மீண்டும் திரும்பி வருவேன் என்று நினைக்கவே இல்லை. என்னை மீட்டுக் கொண்டு வந்த சாரா தொண்டு நிறுவனத்திற்கு நன்றி” என்று தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.