2024 இன் முதல் 6 மாதங்களில் 9 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானம் கிடைத்துள்ளது

இந்த வருடத்தின் கடந்த ஆறு மாதங்களில் ஒன்பது (9) பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானம் கிடைத்துள்ளதாக முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

அத்துடன், கடந்த ஆறு மாதங்களில் இலங்கை சுமார் 800 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீடுகளுக்கான உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொண்டிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 

‘இரண்டு வருட முன்னேற்றமும் எதிர்காலமும்’ என்ற தலைப்பில் இன்று (21) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனைக் குறிப்பிட்டார்.

 

மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம,

 

“இலங்கை முதலீட்டுச் சபை பதினைந்து முதலீட்டு வலயங்களுக்கான வசதிகளை வழங்குவதுடன் அந்த முதலீட்டு வலயங்களில் தற்போது 1575 நிறுவனங்கள் செயற்பாட்டுப் பணிகளை முன்னெடுத்து வருகின்றன. இதில் 500,000 இற்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். தற்போதைய அரசாங்கத்தின் புதிய முதலீட்டுத் திட்டத்தின் கீழ் ஏழு புதிய முதலீட்டு வலயங்களை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

மாங்குளம், பரந்தன், காங்கேசன்துறை, திருகோணமலை, இரணைவில, ஹம்பாந்தோட்டை, பிங்கிரிய ஆகிய பிரதேசங்களைச் சுற்றி இந்தப் புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள முதலீட்டு ஒப்பந்தங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஆனால் கடந்த ஆறு மாதங்களில் முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி ஏற்கனவே 800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளது. அதன்போது, முப்பத்தைந்து முதலீட்டுத் திட்டங்களுக்கான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

 

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்தை கனேடிய – இலங்கை முதலீட்டு வலயமாக மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 

அதேபோன்று, பொருளாதாரப் பரிமாற்றச் சட்டத்தில் திருத்தம் செய்ய மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 

இலங்கையின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான 27 திட்டங்கள் தற்போதும் செயற்படுத்தப்பட்டுள்ளன. ‘One Village One Product’ என்னும் திட்டத்தையும் நாடளாவிய ரீதியில் 14,000 கிராம சேவகர் பிரிவுகளில் செயற்படுத்த எதிர்பாக்கிறோம். அதேபோல் ‘ஈ-கொமர்ஸ்’ ஒன்லைன் தளத்தை அமைத்து அதற்குள் ஏற்றுமதியை ஊக்குவிக்க எதிர்பார்க்கிறோம். இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் ஏற்றுமதி வருமானத்தை 9 பில்லியன்களாக அதிகரிக்க எதிர்பார்க்கிறோம்.

 

மேலும் துறைமுக நகரத்தில் 118 காணித் பிரிவுகளில் 46 பிரிவுகள் சீன முகவர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் 6 காணிப் பிரிவுகள் மீண்டும் இலங்கைக்கு கிடைத்துள்ளன. துறைமுக நகர வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க தற்போது 21 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் இன்னும் பல முதலீடுகளைக் கொண்டு வர எதிர்பார்க்கிறோம்.

 

அதேபோல் பெல்வத்த சீனி நிறுவனத்தை அபிவிருத்தி செய்யவும் எதிர்பார்க்கிறோம். இவ்வாறான அனைத்து முதலீடுகள் வாயிலாகவும் இலங்கையின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த முடியும்.”

 

இந்த ஊடக சந்திப்பில் அமைச்சின் செயலாளர் எம்.நயூப்தீன், முதலீட்டுச் சபையின் தலைவர் எம்.கே.டீ. லோரன்ஸ், ஏற்றுமதி ஊக்குவிப்புச் சபையின் தலைவர் கிங்ஸ்லி பேர்னாட், கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவின் பிரதான செயற்பாட்டு அதிகாரி ரெவான் விக்ரமசூரிய உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

 

 

 

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.