‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 50 வது படமாக வெளியான திரைப்படம் ‘மகாராஜா’.
அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ், திவ்யபாரதி, பாரதிராஜா, சிங்கம் புலி, நட்டி நட்ராஜ், முனீஸ்காந்த் உள்ளிட்டோர் இதில் நடித்திருந்தனர். குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகளைப் பற்றிப் பேசிய இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இந்நிலையில், சமீபத்தில், அளித்த பேட்டியில் நித்திலன் சுவாமிநாதன் ‘மகாராஜா’ விஜய் சேதுபதிக்காக எழுதப்பட்ட கதையல்ல. முதன் முதலில் அந்தப் படத்தில் சாந்தனுதான் நடிக்க வேண்டியது என்று கூறியிருந்தார். தற்போது இதுதொடர்பாக நடிகர் சாந்தனு ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். “மகாராஜா படத்திற்கு உயிர் கொடுத்த நித்திலனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
10 ஆண்டுகளுக்குப் பிறகும் என்னை நினைவு கூறியதற்கு நன்றி சார். சரியான கதையை நான் தேர்வு செய்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். நித்திலன் இந்த கதை சொன்னதே என்னுடைய அப்பாவுக்குத் தெரியாது. இந்தப் படத்தை நான் மிஸ் செய்ய என் அப்பா பாக்யராஜோ அல்லது நானோ காரணம் அல்ல.
தயாரிப்பாளர்கள் அப்போது ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. ஆனால், இப்போ கன்டென்ட்தான் முக்கியம் என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர். காலம்தான் எல்லாவற்றிற்கும் பதில் அளிக்கும்” என்று பதிவிட்டிருக்கிறார்.