ஆம்போன்,
இந்தோனேசியாவின் மலுகு தீவில் வாலி கிராமத்தில் வசித்து வந்தவர் ஹலிமா ரஹாக்பாவ் (வயது 54). இவர் நேற்று முன்தினம் காலையில் குளிப்பதற்காக ஆற்றுக்கு சென்றிருக்கிறார். அப்போது அந்த ஆற்றில் இருந்த முதலை ஒன்று அவரை பிடித்து, விழுங்கி விட்டது.
அவரை காணாமல் கிராமத்தினர் பல இடங்களில் தேடி அலைந்தனர். ஆனால், அதில் பலனில்லை. அவர் போன இடம், விவரம் எதுவும் தெரியாமல் குடும்பத்தினரும் தவித்தனர். இந்நிலையில், நேற்று மீண்டும் அவரை தேட சென்றுள்ளனர்.
இதுபற்றி அந்த பெண்ணின் பக்கத்து வீட்டுக்காரரான ருஷ்டம் இலியாஸ் கூறும்போது, அந்த பெண் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் உறவினர்களும், நண்பர்களும் அவரை தேடி சென்றனர். ஆற்றின் அருகே ஒரு செருப்பும், உடல் பாகங்களும் கிடந்தன என்றார்.
இதனால், பயந்து போன கிராமவாசிகள் போலீசாரிடம் அதுபற்றி கூறினர். உடனே போலீசார் சம்பவ பகுதிக்கு சென்றனர். இதன்பின்பு போலீசார் முன்னிலையில், அந்த முதலையை கிராமத்தினர் பிடித்தனர். அதன் வயிற்று பகுதியை அறுத்து உள்ளே பார்த்ததில் பெண்ணின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
12 அடி நீளம் கொண்ட அந்த பெரிய முதலையின் இனம் எந்த வகையை சேர்ந்தது என போலீசாரோ, கிராமத்தினரோ கண்டறிய முடியவில்லை. கடந்த ஞாயிற்று கிழமை சுமத்ரா தீவு கூட்டங்களுக்கு உட்பட்ட பாங்கா தீவில் ஆற்றின் அருகே 63 வயது சுரங்க தொழிலாளி ஒருவரை முதலை கொன்றது.
இந்தோனேசியாவில் பல வகை முதலை இனங்கள் உள்ளன. அவை மனிதர்களை அடிக்கடி தாக்கி, கொல்லும் செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.