டெஹ்ரான்: இராக்கின் கர்பலா மாகாணத்தில் லட்சக்கணக்கான ஷியா முஸ்லிம்கள் தற்போது அர்பயீன் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இந்த யாத்திரையில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானில் இருந்து 50-க்கும் மேற்பட்ட ஷியா முஸ்லிம்கள் இராக்கின் கர்பலா நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
இவர்கள் பாகிஸ்தானின் சிந்து மாகாணம், லர்கானாபகுதியை சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது. இந்நிலையில் மத்திய ஈரானில் உள்ள யாஸ்த் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு இவர்கள் செல்லும்போது இவர்களின் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் 28 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து யாஸ்த் மாகாண பேரிடர் மேலாண்மை இயக்குநர் கூறுகையில், “இந்த விபத்தில் துரதிருஷ்டவசமாக 17 ஆண்களும் 11 பெண்களும் உயிரிழந்தனர். 23 பேர் காயமைடந்தனர். இவர்களில் 7 பேர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். விபத்தை தொடர்ந்து பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் யாஸ்த் மாகாணத்துக்கு அழைக்கப்பட்டனர்’’ என்றார்.
விபத்து குறித்து எக்ஸ் வலைதளத்தில் ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி வெளியிட்டுள்ள பதிவில், “பாகிஸ்தான் சகோதர அரசுக்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஈரானில் நிவாரணம் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான சேவைகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்” என்று கூறியுள்ளார்.