புதுடெல்லி: கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதைக் கண்டித்தும், மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த டெல்லி எய்ம்ஸ் பயிற்சி மருத்துவர்கள், டெல்லி ஆர்.எம்.எல் மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை ஏற்று வேலைநிறுத்தத்தை திரும்பப் பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக டெல்லி எய்ம்ஸ் பயிற்சி மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாங்கள் 11 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். நீதிமன்றங்களின் தலையீடு காரணமாக நாங்கள் சில ஆறுதல்களைப் பெற்றுள்ளோம். முதல் ஆறுதல், இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை ஏற்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.
இரண்டாவது, இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டிருப்பது. ஒருங்கிணைந்த ஆலோசனைகள் எங்கள் தரப்பில் நடத்தப்பட்டன. நடைபெற்று வரும் அனைத்தையும் நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம். வேலைநிறுத்தத்தை திரும்பப் பெறுவது என்று எங்கள் பொதுக்குழு முடிவெடுத்துள்ளது. அதேநேரத்தில், நீதிக்கான போராட்டம், சுகாதார பணியாளர்களின் பாதுகாப்புக்கான போராட்டம் தொடரும். அனைத்து மருத்துவர்களும் இன்றே பணியில் இணைவார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர்களும் தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் கோரிக்கை தொடர்பாக ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் மற்றும் எங்கள் கவலையை தீர்க்க உச்ச நீதிமன்றம் எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக நாங்கள் எங்கள் வேலைநிறுத்தத்தை முடித்துக்கொள்கிறோம்.
நாங்கள் எங்கள் கடமைகளை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளோம். கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் நிகழ்ந்த துயர சம்பவம், நமது நாட்டில் பயிற்சி மருத்துவர்களின் அவல நிலையை வெளிச்சம்போட்டு காட்டி இருக்கிறது. ஆகஸ்ட் 23-ஆம் தேதி காலை 8 மணி முதல் மீண்டும் பணிக்குத் திரும்ப அனைத்து பயிற்சி மருத்துவர்களையும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கொல்கத்தா பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு இரண்டாவது நாளாக உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பயிற்சி மருத்துவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத், நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட தேசிய பணிக்குழுவில் (NTF) பயிற்சி மருத்துவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கை ஏற்கப்படுவதாக தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவித்தார். மேலும் அவர், “மருத்துவர்கள் இல்லாமல் பொது சுகாதார உள்கட்டமைப்பு எவ்வாறு இயங்கும்? எனவே, மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்.” என வலியுறுத்தினார்.