108 ஆம்புலன்ஸ் சேவையைப் போன்றே, கால்நடைகளுக்கான மருத்துவ சேவைக்காக 1962 என்ற கால்நடை ஆம்புலன்ஸ் திட்டத்தைச் செயல்படுத்திவருகிறது மத்திய அரசு. இந்தத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட சுமார் 250 ஆம்புலன்ஸ்களை இயக்காமல், ஓர் ஆண்டுக்காலமாக திருவள்ளூர் மாவட்டம், குத்தம்பாக்கம் அருகே நிறுத்திவைத்திருந்தது தமிழக கால்நடைப் பராமரிப்புத்துறை. ஆம்புலன்ஸ்களில் முதல்வர் ஸ்டாலினின் படத்தைவிட, பிரதமர் மோடியின் படம் பெரிய அளவில் இடம்பெற்றிருந்ததே இதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில், எந்த விளம்பரமும் இல்லாமல், கடந்த 20-ம் தேதி இந்த ஆம்புலன்ஸ் சேவையைத் திடீரென கொடியசைத்துத் தொடங்கிவைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
‘கலைஞர் நூற்றாண்டு நாணயம் வெளியீட்டு விழாவால் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு மேம்பட்டிருப்பதாலேயே, கிடப்பில் போடப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் திட்டத்தைத் தொடங்கிவைத்ததோடு, அதை ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுப்பிவைத்திருக்கிறது தி.மு.க அரசு. இப்போது மோடியின் படத்துடன் பட்டி தொட்டியெங்கும் கால்நடை ஆம்புலன்ஸ்கள் பறக்கின்றன’ என்கிறார்கள் கால்நடை பராமரிப்புத்துறையினர். “இது மட்டுமல்ல, அடுத்தடுத்து வேறு சில மத்திய அரசின் திட்டங்களுக்கும் இங்கே அனுமதி அளிக்கப்படும். அதற்கான ஏற்பாடுகளும் கோட்டையில் நடந்துகொண்டிருக்கின்றன” என்கிறார்கள் சீனியர் அதிகாரிகள்.
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நடித்திருக்கும் ‘கோட்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. அந்தத் திரைப்படத்தில், மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். அதற்கு அனுமதியளித்த விஜயகாந்த் குடும்பத்துக்கு நன்றி சொல்ல, சமீபத்தில் விஜயகாந்த்தின் இல்லத்துக்குச் சென்றார் விஜய். விஜயகாந்தின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தியவர், தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்தும், இறுதியாக தான் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் குறித்தும் பிரேமலதா விஜயகாந்திடம் பேசியிருக்கிறார்.
கூடவே, தான் பிரபலமாகாத காலத்தில் தன்னுடைய ‘செந்தூரப்பாண்டி’ திரைப்படத்தில், விஜயகாந்த் நடித்துக் கொடுத்ததையும் நினைவுகூர்ந்திருக்கிறார். அப்போது, “உங்களோட அடுத்த படத்துல என் பையன் சண்முகப் பாண்டியனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்க. விஜயகாந்த் உங்களுக்குக் கைகொடுத்து தூக்கிவிட்ட மாதிரி, பையனையும் கைதூக்கிவிடுங்க…” என கோரிக்கை வைத்தாராம் பிரேமலதா. இதை எதிர்பார்க்காத விஜய், எந்த உத்தரவாதமும் கொடுக்காமல், மையமாகப் புன்னகைத்துவிட்டு கிளம்பிவிட்டாராம்.
தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையையும், புதிய பேருந்து நிலையத்தையும் இணைக்கும் வகையில் சாலை அமைப்பதற்கு, தி.மு.க எம்.பி முரசொலி முயற்சி மேற்கொண்டு, அதற்கான பணிகளையும் தொடங்கிவைத்திருக்கிறார். ஆனால், அந்த நிகழ்ச்சியில் தொகுதி எம்.எல்.ஏ நீலமேகம் பங்கேற்கவில்லை. “எங்கள் அண்ணன் எம்.எல்.ஏ மட்டுமல்ல, மாவட்டச் செயலாளரும்கூட. இந்தத் திட்டம் பற்றி அவரிடம் ஆலோசிக்கவும் இல்லை… விழாவுக்கு அழைக்கவும் இல்லை என்றால் எப்படி?” என்று கடுப்பில் இருக்கிறது நீலமேகம் தரப்பு. முரசொலி தரப்போ, “இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து தலைமைக்குச் சொல்லிவிட்டோம்.
பிறகு எதற்கு இவரிடம் சொல்ல வேண்டும்?” என வீம்பு காட்டுகிறது. “மத்திய மாநில அரசுகள்கூட, அரசு விழாவில் ஒன்று சேர்ந்துவிடுகின்றன. ஆனால், நம்ம எம்.பி-யும், எம்.எல்.ஏ-வும் ஒரே கட்சியில இருந்துக்கிட்டு இப்படி ஈகோ காட்டுறாங்களே… மக்களவைத் தேர்தல் பகையை, சட்டமன்றத் தேர்தல் வரைக்கும் இழுத்துடுவாங்கபோலயே?!” எனப் புலம்புகிறார்கள் உள்ளூர் உடன்பிறப்புகள்.
`கதைசொல்லி’ தலைவருக்கும், காவல்துறை அதிகாரி ஒருவருக்குமான மோதல் உச்சத்தை எட்டியிருக்கிறது. காவல்துறை அதிகாரி குறித்தும், அவருடைய குடும்பத்தினர் குறித்தும் சமூக வலைதளத்தில் `கதைசொல்லி’ தலைவரின் தம்பிகள் எல்லை மீறி விமர்சனம் செய்ய, “அவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன்பு நிறுத்துவேன்” எனக் கொதித்தார் அந்த அதிகாரி. இதில், ஜெர்க்கான `கதைசொல்லி’ தலைவர் தனக்கும், அப்படிப் பதிவிடுபவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையெனச் சொன்னதோடு, முக்கிய நிர்வாகிகள் சிலரை அழைத்து “இது தொடர்பாக சமூக வலைதளத்தில் எதுவும் எழுதவோ, பேசவோ வேண்டாம்” என உத்தரவிட, எல்லோரும் சைலன்ட் மோடுக்குச் சென்றுவிட்டார்களாம். சமீபத்தில் ரீ ஆக்டிவ் ஆன அந்தத் தம்பிகள், “தலைவர் நாகரிகமாகப் பேசினால், கடைக்கோடித் தொண்டனும் அதைக் கடைப்பிடிப்பான்… இவரு ஏறுக்கு மாறா பேசிடுறாரு… கடைசியில களி திங்கிறது நாமா?!” என நொந்துகொண்டார்களாம்.
கோட்டையின் முக்கியப் பொறுப்புக்கு புதிதாகத் தலைமையேற்றிருக்கும் மூத்த அதிகாரிக்கு ஏற்ற வகையில், அவர் பொறுப்பேற்கும் முன்பே பல்வேறு நியமனங்களைச் செய்திருந்தது தமிழ்நாடு அரசு. இந்த நிலையில், மேலும் சில அதிகாரிகளை முக்கியப் பொறுப்புக்குக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கிறாராம் அந்த அதிகாரி.
இதனால், “கோட்டையில் விரைவில் பெரிய அளவில் அதிகாரிகள் மாற்றம் இருக்கும்” என்கிறார்கள். “சமீபத்தில்தான் சீனியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மாற்றப்பட்டார்கள். இப்போது மறுபடியும் சீட்டுக்கட்டைக் கலைப்பதுபோல, அதிகாரிகளைக் கலைத்து ஆடினால், பல துறைகளிலும் ஃபைல்கள் தேங்கிவிடாதா?” எனப் புலம்புகிறது அதிகாரிகள் வட்டாரம்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88