புதுடெல்லி: உத்தர பிரதேசம் புலந்சாகரில் உள்ளதபால் அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு சிபிஐ சோதனை நடந்தது. இந்நிலையில் அந்த தபால் அலுவலகத்தின் கண்காணிப்பாளர் நேற்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உத்தர பிரதேசம் புலந்சாகரில் உள்ள தபால் அலுவலகத்தில் ஓய்வுபெற்ற கள அதிகாரி உட்பட 8-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக சிபிஐ-யின் லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு புகார் சென்றது. அந்த அலுவலகத்தில் கோடிக்கணக்கில் பணம் கையாடல் செய்யப்பட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதனால் அந்த தபால் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு சோதனை நடத்தினர்.
இந்நிலையில் அந்த தபால் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றிய திரிபுவன் பிரதாப்சிங் தான் உரிமம் பெற்று வாங்கி வைத்திருந்த கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்பு அவர் கடிதம் எழுதி, அதை தனது அலுவலக வாட்ஸ்ஆப் குரூப்பிலும் பகிர்ந்துள்ளார். அதில் அவருடன் பணியாற்றும் சக ஊழியர்கள், அவர்கள் கூறும்படி செயல்பட வற்புறுத்தினர் என்றும் இதனால் தற்கொலை செய்து கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த கடிதத்தை வாட்ஸ்ஆப்-ல்பார்த்து பயந்து போன சக ஊழியர்கள், அந்த தகவலை கண்காணிப்பாளர் திரிபுவன் பிரதாப் சிங் குடும்பத்தினருக்கு அனுப்பி அவரை காப்பாற்றும்படி கூறியுள்ளனர். இதையடுத்து திரிபுவன் பிரதாப் சிங்கின் சகோதாரர் பிரேம்பால் சிங் உடனடியாக தனது சகோதரர் வீட்டுக்கு விரைந்தார். அவரது வீடு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது திரிபுவன் பிரதாப் சிங் இறந்த நிலையில் கிடந்தார்.
சிபிஐ சோதனையால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் திரிபுவன் பிரதாப்சிங் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஆனால், அவருடன் பணியாற்றும் ஒரு பெண் உட்பட சில அதிகாரிகள், அவர்கள் இஷ்டத்துக்கு செயல்படும்படி தொந்தரவு கொடுத்ததுதான் அவரது தற்கொலைக்கு காரணம் என திரிபுவன் பிரதாப் சிங் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து விசாணை நடந்து வருகிறது.திரிபுவன் பிரதாப் சிங்குக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.