ஜனநாயகத்தின் கேந்திர நிலையம் பாராளுமன்றம் எனவும் தற்பொழுது உலகில் காணப்படும் மிகவும் பொருத்தமான மற்றும் வெற்றிகரமான ஜனநாயக முறைமை பாராளுமன்ற முறைமையில் கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். ஒரு நாட்டில் பாராளுமன்றம் இருப்பதன் தேவையை குறிப்பிட்ட சபாநாயகர் மாணவர் பாராளுமன்றத்தின் ஊடாக பாடசாலைகளை விருத்தி செய்யும் விதத்தை சுட்டிக்காட்டினார்.
சபாநாயகரின் தலைமையில் மற்றும் அம்பலாங்கொட தர்மாஷோக வித்தியாலயத்தின் பழைய மாணவியான பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன ஆகியோரின் பங்குபற்றலில் கடந்த 16 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அம்பலாங்கொட தர்மாஷோக வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்ற ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும் போதே சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டார். அம்பலாங்கொட தர்மாஷோக வித்தியாலயத்தின் மாணவ மாணவிகளுக்கு பாராளுமன்ற முறைமை தொடர்பான பிரயோக ரீதியான அனுவபங்களை வழங்கும் நோக்கில் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்துடன் இணைத்து இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இங்கு பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் அதன் வகிபாகம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்த பாராளுமன்றத்தின் செயலர் நாயகம் குஷானி ரோஹணதீர, பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் குறித்து முழுமையாக விளக்கமளித்தார். அத்துடன், இங்கு உரையாற்றிய பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன, பாடசாலையில் மாணவர் பாராளுமன்றங்கள் சரியான பாடத்திட்டங்களுடன் செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் அது பாடசாலையின் அபிவிருத்தியில் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றது என்பதையும் வலியுறுத்தினார்.
அதற்கமைய, இதன்போது அம்பலாங்கொட தர்மாஷோக வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப நிகழ்வை ஆரம்பிக்கும் வகையில் சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது. அதனையடுத்து பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணம் இடம்பெற்றது. அதனையடுத்து மாணவர் பாராளுமன்றத்தின் ஒவ்வோர் அமைச்சரும் தாம் செயற்படுத்த முன்மொழியும் திட்டங்கள் தொடர்பில் சபையை தெளிவுபடுத்தினர்.
இந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா, அம்பலாங்கொட தர்மாஷோக வித்தியாலயத்தின் அதிபர் கே.ஏ.டி. கருணாரத்ன, உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், அம்பலாங்கொட தர்மாஷோக வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையின் தலைவர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் டில்ஷான் வாசகே உள்ளிட்ட அங்கத்தவர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.