ராஞ்சி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்குள் அவமானத்தை சந்தித்ததால், தனி கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் சம்பய் சோரன் அறிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் நிதி மோசடி வழக்கில் கைதானதால், கடந்த பிப்ரவரி 2-ம் தேதி முதல்வராக சம்பய் சோரன் பதவியேற்றார். சிறையில் இருந்து ஹேமந்த் சோரன் கடந்த ஜூலை மாதம் வெளியே வந்ததும், முதல்வர் பதவியை சம்பய் சோரன் ராஜினாமா செய்தார். ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வரானார்.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் வரும் நவம்பர் அல்லது டிசம்பரில் நடக்க உள்ளது. இந்த நிலையில், புதிய கட்சி தொடங்க திட்டமிட்டிருப்பதாக சம்பய் சோரன் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சராய்கேலா கர்சாவன் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: என் வாழ்க்கையில் இன்று முதல் புதிய அத்தியாயம் தொடங்க உள்ளது என்று கட்சி கூட்டத்தில் ஏற்கெனவே அறிவித்துவிட்டேன். எனக்கு 3 வழிகள்தான் உள்ளன. ஒன்று அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது. 2-வது, புதிய கட்சி தொடங்குவது. 3-வது, வழியில் யாராவது நல்ல நண்பரை சந்தித்தால் அவர்களுடன் கூட்டணி அமைப்பது. ஆனால், நான் ஓய்வு பெறப் போவது இல்லை. ஒரு வாரத்தில் கட்சி தொடங்கப்படும். எனது கட்சியுடன் எந்த கட்சியும் கூட்டணியில் இணையலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, சம்பய் சோரன் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: நான் முதல்வராக இருந்தபோது, கசப்பான அவமானத்தை சந்தித்தேன். நான் பங்கேற்க இருந்த அரசு நிகழ்ச்சிகளை எனக்கு தெரியாமலேயே எனது கட்சி தலைவர்கள் ரத்து செய்தனர். எனது சுய மரியாதைக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதனால், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைமை மீது கடும் அதிருப்தி ஏற்பட்டது. பல அவமானங்களுக்கு பிறகு, வேறு வழியை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.