புதுடெல்லி: பத்ம விருதுகள் 2025-க்கான விண்ணப்பங்களை செப்டம்பர் 15 வரை சமர்ப்பிக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2025 குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படவுள்ள பத்ம விருதுகள் 2025-க்கான விண்ணப்ப, பரிந்துரை நடைமுறைகள் 2024 மே 01 முதல் தொடங்கியுள்ளன. பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளுக்கான கடைசி தேதி 2024 செப்டம்பர் 15 ஆகும். பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் / பரிந்துரைகளை தேசிய விருதுகள் தளமான https://awards.gov.in என்ற இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
பத்ம விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகியவை நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதுகளாகும். 1954-ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படுகின்றன. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரங்கள், சிவில் சேவை, வர்த்தகம், தொழில்துறை போன்ற அனைத்து துறைகளிலும் புகழ்பெற்ற, சிறந்த சாதனைகள், சேவைகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. இனம், தொழில், பதவி அல்லது பாலின வேறுபாடின்றி அனைத்து நபர்களும் இந்த விருதுகளுக்கு தகுதியானவர்கள்.
பத்ம விருதுகளை மக்களின் பத்ம விருதுகளாக மாற்ற அரசு உறுதிபூண்டுள்ளது. எனவே தகுதியான நபர்கள், சுய நியமன மனுக்கள், பிறருக்காக பரிந்துரை மனுக்களை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது தொடர்பான கூடுதல் விவரங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளமான https://mha.gov.in , விருதுகள் – பதக்கங்கள் என்ற தலைப்பிலும், பத்ம விருதுகள் இணைய தளமான https://padmaawards.gov.in என்ற தளத்திலும் உள்ளன. இந்த விருதுகள் தொடர்பான விதிகள் https://padmaawards.gov.in/AboutAwards.aspx என்ற இணையதள இணைப்பில் உள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.