புதுச்சேரி: மீண்டும் போராட்டங்கள் எழத்தொடங்கிய நிலையில், மின்துறை தனியார்மயம் மற்றும் மின்துறை மேம்பாடு தொடர்பாக அனைத்து யூனியன் பிரதேசங்களுடன் மத்திய உள்துறை அமைச்சகம் இன்று ஏற்பாடு செய்திருந்த காணொலிக் கூட்டம் திடீரென்று ரத்தானது.
யூனியன் பிரதேசங்களில் மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. யூனியன் பிரதேசமான புதுவையில் மின்துறையை தனியார்மயமாக்க அரசு நடவடிக்கைகளை தொடங்கியது. இதற்கு மின்துறை பொறியாளர்கள், ஊழியர்கள் சங்கம், அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தனியார்மயத்தைக் கண்டித்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் பந்த் உட்பட பல்வேறு போராட்டங்கள் நடந்தது.
தனியார்மயத்தை எதிர்த்து மின்துறை ஊழியர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இதனால் தனியார்மய எதிர்ப்பு போராட்டங்கள் நிறுத்தப்பட்டிருந்தது. நடந்து முடிந்த சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் மின்துறை தனியார்மயமாகாது என பேரவைத்தலைவர் செல்வம் உறுதியளித்தார்.
அதைத்தொடர்ந்து மின்துறை அமைச்சர் நமச்சிவாயம், மின்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளோம். மின்துறையை நவீனமயமாக்கவும் உள்ளோம் என தெரிவித்து, மின்துறை தனியார்மயமாகாது என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மின்துறை தனியார்மயம் மற்றும் நவீனமயமாக்கல் குறித்த ஆலோசனைக்கூட்டம் அனைத்து யூனியன் பிரதேச அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சகத்தால் இன்று நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. புதுவை தலைமை செய்லகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் புதுவை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதையடுத்து மீண்டும் மின்துறை தனியார்மயத்தை எதிர்த்து கருத்துகள் வெளியிடலும், போராட்டங்களும் நடந்தன.
இச்சூழலில் மத்திய உள்துறை அமைச்சகத்தால் மாநில தலைமைச்செயலர் சரத்சவுகானுக்கு மின்துறை தனியார்மயம் மற்றும் நவீனமயமாக்கல் தொடர்பாக அனைத்து யூனியன் பிரதேசங்களுக்கு நடக்கவிருந்த கூட்டம் தள்ளி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து கூட்டம் நடைபெறவில்லை என்று தலைமைச்செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.