மும்பை அருகே பத்லாப்பூர் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் பள்ளியில் நர்சரி வகுப்பில் படித்து வந்த 4 வயது சிறுமிகள் இரண்டு பேரை அதே பள்ளியில் தூய்மைத் தொழிலாளியாக பணியாற்றுபவர், பள்ளிக் கழிவறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் குற்றவாளி கைதுசெய்யப்பட்டுள்ளார். பாலியல் கொடுமையில் ஈடுபட்டவர் மீதான வழக்கை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்க முடிவு செய்து, சிறப்பு வழக்கறிஞரையும் மாநில அரசு நியமித்து இருக்கிறது. மாணவிகள் மீதான பாலியல் கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோரும், உள்ளூர் பொதுமக்களும் சேர்ந்து கடந்த செவ்வாய்கிழமை பத்லாப்பூரில் பந்த்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்த பந்த்தின்போது சம்பவம் நடந்த பள்ளிக்குள் புகுந்த போராட்டக்காரர்கள், பள்ளியை சூறையாடினர். அதோடு போராட்டக்காரர்கள் பத்லாப்பூர் ரயில் நிலையத்திற்கு வந்து அங்கேயும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களின் கோரிக்கை அனைத்தும் ஏற்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்ட பிறகும் போராட்டக்காரர்கள் ரயில் நிலையத்தை விட்டு நகராமல் தொடர்ந்து போராடம் நடத்திக்கொண்டிருந்தனர். அதோடு கல்வீச்சுத் தாக்குதலிலும் ஈடுபட்டனர். இதில் 7 போலீஸார் காயமடைந்தனர். இதனால் 10 மணி நேரத்திற்கும் மேலாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது. போலீஸார் தடியடி நடத்தியதால், ஒரே போர்க்களம் போன்று மாறியது.
பொதுமக்கள் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த நபரின் வீட்டிற்குள் புகுந்து அந்த வீட்டை சூறையாடினர். இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி போலீஸார் 1,500 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் ஒவ்வொருவராக போலீஸார் கைது செய்து வருகின்றனர். மேற்கொண்டு போராட்டம் நடக்காமல் இருக்க நேற்று பத்லாப்பூரில் இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டது. இது வரை 100 பேர் பிடித்துச் செல்லப்பட்டு அவர்களில் 60 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்போராட்டம் அரசியல் உள்நோக்கத்தோடு நடத்தப்பட்டதாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குற்றம் சாட்டி இருக்கிறார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் வெளியில் இருந்து ஆட்களை அழைத்து வந்து இப்போராட்டத்தில் ஈடுபட வைத்துள்ளனர். இது போன்ற விவகாரங்களை எதிர்க்கட்சிகள் அரசியலாக்கக்கூடாது” என்றார்.
பத்லாப்பூர் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை மும்பை உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து விசாரிக்க ஆரம்பித்து இருக்கிறது. இன்று இவ்வழக்கு நீதிபதி ரேவதி மற்றும் பிரித்விராஜ் சவான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், பள்ளியில் பாதுகாப்பான சூழ்நிலை இல்லாவிட்டால் அங்கு படிப்பை பற்றி எப்படி பேச முடியும் என்று கேள்வி எழுப்பினர். இச்சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது என்று தெரிவித்த நீதிபதிகள், பாதிக்கப்பட்ட மாணவிகள் பள்ளியில் புகார் செய்தார்களா என்று கேள்வி எழுப்பினர். உடனே புகார் செய்யப்பட்டது என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இது குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் பள்ளி நிர்வாகம் வழக்கு பதிவு செய்ததா என்று அரசு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், இச்சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக்கு குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட பள்ளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார். இதையடுத்து இவ்வழக்கு விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கோர்ட்டில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் 24-ம் தேதி மாநிலம் தழுவிய பந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.