தமிழக வெற்றக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய், சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று அறிமுகம் செய்தார். கொடியில் சிவப்பு, மஞ்சள் நிற கொடியில் இரண்டு போர் யானைகளுக்கு நடுவே வாகை மலர் இடம் பெற்றிருக்கிறது. கட்சியின் கொள்கைகள், எதிர்கால திட்டங்கள் அடங்கிய பாடலையும் வெளியிட்டிருக்கிறார்.

கொடி ஏற்றிய பிறகு பேசிய விஜய், “எல்லோருக்கும் வணக்கம். இன்றைக்கு நம் எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷமான நாள். நான் என்னுடைய அரசியல் பயணத்தைத் தொடங்கி அதுக்கு தொடக்கப்புள்ளியா பிப்ரவரி மாசம் கட்சியின் பெயரை அறிவித்தேன். அப்போதிலிருந்து நீங்கள் எல்லோரும் குறிப்பிட்ட நாளுக்காகக் காத்திருக்கிறீர்கள் எனத் தெரிகிறது. நம் முதல் மாநில மாநாடு… அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் சிறப்பாக நடந்து வருகின்றன. விரைவில் அதற்கான நாள், நேரம், இடத்தை அறிவிப்பேன்.
அதற்கு முன்பாக நம் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் முன்பும் கொடியை அறிமுகப்படுத்தியதைப் பெருமையாக நினைக்கிறேன். இதுவரை நமக்காக உழைத்தோம். இனி தமிழ்நாட்டுக்காகவும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காகவும் நாம் எல்லோரும் சேர்ந்து உழைப்போம்” என்று பேசியிருந்தார்.
வாழ்த்துக்கள் @actorvijay அண்ணா ❤️ pic.twitter.com/odvNmMiJ8e
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) August 22, 2024
விஜய் கட்சிக்கொடி அறிமுகப்படுத்தியதற்கு பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சினிமா பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அனிருத், பிரபுதேவா, சமுத்திரக்கனி, கார்த்திக் சுப்புராஜ், கிருஷ்ணா, சாந்தனு, தமன் உள்ளிட்ட பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கின்றனர்.