அனகாபல்லி: ஆந்திர மாநிலம், அனகாபல்லியில் மருந்து தொழிற்சாலையில் நடந்த வெடிவிபத்தில் 17 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்து சிகிச்சை பெற்றுவருவோரை முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று (ஆக.22) மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஆந்திர மாநிலம், அனகாபல்லி மாவட்டம், ராம்பில்லி மண்டலம், அச்சுதாபுரம் எனும் ஊரில் ஒரு தனியார் மருந்து ஆலை உள்ளது. இங்கு 3 ஷிப்ட்களில் தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஷிப்டிலும் சுமார் 300 முதல் 380 பேர் வரை பணி புரிவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று (ஆக.21) மதிய ஷிப்டின் போது, தொழிற்சாலைக்குள் இருந்த ரியாக்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இதில் இதுவரை 17 தொழிலாளர்கள் பலியாகினர். பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தத் துயரச் சம்பவம் ஆந்திரா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் நேரில் ஆறுதல்: இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்த நபர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து விவரம் கேட்டறிந்தார்.
அதேபோல் அனகாப்பல்லி எம்.பி. ரமேஷும் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த அவர், “காயமடைந்தவர்களின் நிலைமை சீராக உள்ளது. அவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்கப்படுகிறது. மேல் சிகிச்சை தேவைப்படுவோர் ஹைதராபாத், மும்பை, டெல்லி மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுவார்கள்” என்றார்.
இதற்கிடையில், கேஜிஎச் மருத்துவமனையின் பிணவறையைச் சூழ்ந்த உயிரிழந்தோரின் உறவினர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை நினைத்து கதறி அழும் காட்சிகள் காண்போரைக் கலங்கவைக்கும் வகையில் இருந்தது.
41 பேர் காயம்: ஊடகங்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ஹரேந்திர பிரசாத், இந்த விபத்தில் சிக்கி 41 பேர் காயமடைந்துள்ளனர். 10 பேர் மெடிகோவர் மருத்துவமனை மற்றும் விசாகப்பட்டினம் கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். சிலருக்கு 30 முதல் 40 சதவீதம் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் உடல்நிலை இப்போதைக்கு சீராகவே உள்ளது. விபத்துப் பகுதியில் நிபுணர்கள் ஆய்வு செய்து விபத்துக்கான காரணத்தை உறுதிப்படுத்துவர்” என்றார்.
ரூ.1 கோடி இழப்பீடு: விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் அங்கே சென்ற ஆட்சியர் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதோடு உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும், காயமடைந்தோருக்கான இழப்பீடு அவர்களின் காயங்களைப் பொறுத்து கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.
அமைச்சர் கூறிய காரணம்: தொழிற்சாலை விபத்து குறித்து மாநில உள்துறை அமைச்சர் வி.அனிதா ஊடகங்களுக்கு அளித்தப் பேட்டியில், விபத்து நடந்த எஸ்ஸியன்டியா மருந்து ஆலையில், MTBE (Methy Tertiary Butyl Ether) மெத்தில் டெர்ஷியரி ப்யூடல் ஈதர் எனும் கரைப்பான் கசிந்துள்ளது. இந்தக் கசிவை நிறுத்த ஊழியர்கள் முயன்றுள்ளனர். அதற்குள் அது வாயுவாக மாறி ஆலையின் 3வது தளத்தில் இருந்து கீழே இருந்த மற்ற தளங்களுக்கும் பரவியது. கசிவை நிறுத்துவதற்குள் அது அங்கே இருந்த ஒரு மின்சார பேனலின் மீது விழுந்து தீப்பற்றியுள்ளது. முதற்கட்ட விசாரணையின்படி இதுவே விபத்துக்கான காரணமாகத் தெரிகிறது” என்றார்.
நிபுணர்கள் கோரிக்கை: மருந்தாலை விபத்தில் 17 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், “ஆரஞ்சு மற்றும் சிவப்பு பட்டியலில் உள்ள ஆபத்து நிறைந்த தொழிற்சாலைகளை நிபுணத்துவம் கொண்ட சுயாதீன குழுக்கள் மூலம் அவ்வப்போது சோதனைக்கு உள்ளாக்கி பாதுகாப்பு அம்சங்களை கண்காணிக்க வேண்டும்” என்று வலியுறுத்துகின்றனர்.