IND vs BAN: இந்திய அணி ரெடி… அந்த ஒரு இடம் மட்டும் பிரச்னை – யாருக்கு கிடைக்கும் வாய்ப்பு?

India vs Bangladesh Test Series: டி20 உலகக் கோப்பையை வென்ற பின்னர் இந்திய அணி இரண்டு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டது. ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 4-1 என்ற டி20 தொடரை வென்ற இந்திய அணி (Team India) அடுத்த இலங்கைக்கு சென்றது. அங்கு டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கெத்தாக வென்றாலும், ஓடிஐ தொடரை 0-2 என்ற கணக்கில் மோசமாக தோற்று ஏமாற்றம் அளித்தது. 

அதன்பின் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு இந்திய தேசிய கிரிக்கெட் அணிக்கு (India National Cricket Team) சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வளிக்கப்பட்டிருக்கிறது. ஆக. 7ஆம் தேதி இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு பின்னர், இந்திய அணி அடுத்து செப். 19ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில்தான் விளையாட உள்ளது. இதற்கு நடுவே உள்ளூர் தொடரான துலிப் டிராபி வரும் செப். 5ஆம் தேதி ஆந்திராவின் அனந்தபூரிலும், கர்நாடகா தலைநகர் பெங்களூருவிலும் நடைபெற இருக்கிறது. 

நீண்ட டெஸ்ட் சீசன்

துலிப் டிராபி தொடரில் (Duleep Trophy 2024) இந்திய அணியின் முன்னணி வீரர்கள் விளையாடும் நிலையில், அடுத்து வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் இந்தியா விளையாடுகிறது. இந்தியா வரும் நியூசிலாந்து அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மட்டும் ரோஹித் & கோ விளையாடுகிறது. அதன்பின், நவம்பர் – ஜனவரி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் தொடரில் இந்தியா விளையாடுகிறது. ஜனவரியில் இங்கிலாந்து உடன் உள்நாட்டில் ஓடிஐ மற்றும் டி20 தொடர்களை விளையாடிய பிறகு, சாம்பியன்ஸ் டிராபிக்கு இந்தியா தயாராகும். 

நீண்ட டெஸ்ட் சீசனை எதிர்நோக்கி இந்திய அணியும் தயாராகி வருகிறது. அதில் முதல் தொடராக வங்கதேச டெஸ்ட் தொடர் பார்க்கப்படுகிறது. இந்திய அணி பரிசார்த்த முயற்சிகளை மேற்கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு எனலாம். ரோஹித் சர்மாதான் கேப்டனாக நீடிக்கப்போகிறார் எனலாம். 

இந்த 10 வீரர்களின் இடம் உறுதி…

ரோஹித் சர்மா – ஜெய்ஸ்வால் ஆகியோர்தான் ஓப்பனிங்கில் இறங்குவார்கள். இவர்களை தவிர சுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், ஜடேஜா, அஸ்வின் ஆகியோருக்கு இடம் நிச்சயம். மிடில் ஆர்டர் பேட்டிங்கில் ஒரு பேக்அப்  வீரர் மட்டுமே தேவைப்படுவார். அந்த ஒரு இடத்திற்கு சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரேல், ரஜத் பட்டிதார், தேவ்தத் படிக்கல், ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர் போட்டியிடுவார்கள். இதில் ஒருவர் அல்லது இருவருக்கு ஸ்குவாடில் இடம் கிடைக்கலாம். 

சுழற்பந்துவீச்சை எடுத்துக்கொண்டால் லெக் ஸ்பின்னரான குல்தீப் யாதவிற்கும் ஸ்பாட் நிச்சயம். டெஸ்ட் போட்டிகள் இரண்டும் முறையே சென்னை, கான்பூரில் நடப்பதால் பிளேயிங் லெவனில் மூன்று ஸ்பின்னர்கள் இருக்க வாய்ப்புள்ளது. அக்சர் படேல் ஸ்குவாடில் இடம்பெறுவார் என்றால் பிளேயிங் லெவனில் வருவாரா என்பது கேள்விக்குறிதான். 

இருப்பினும், ஷமி, பும்ரா உள்ளிட்ட சீனியர் பந்துவீச்சாளர்களுக்கு வங்கதேச தொடரில் ஓய்வளிக்கப்படலாம். நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உடற்தகுதியுடன் விளையாடுவதற்கு ஏதுவாக அவர்களுக்கு ஓய்வு வழங்கப்படும். சிராஜ் விளையாடுவது உறுதி. எனவே, வேகப்பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, யாஷ் தயாள், ஹர்ஷித் ராணா, ஆகாஷ் தீப், முகேஷ் குமார் ஆகியோரில் இருவருக்கு டெஸ்ட் ஸ்குவாடில் இடம் இருக்கும். 
பந்துவீச்சில் இத்தனை சாய்ஸ் இருந்தாலும் பேட்டிங்கில் ஏறத்தாழ ஓரிரு இடங்களை தவிர அனைத்து ஸ்பாட்களும் நிரம்பிவிட்டன எனலாம். இப்படியிருக்க வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி துலிப் டிராபி தொடரில் முதல் சுற்று போட்டிகள் முடிந்த உடன் அறிவிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. 

IND vs BAN: இந்திய டெஸ்ட் அணி ஸ்குவாட் (கணிப்பு)

ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், ரவிந்திர ஜடேஜா, ரவிசந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், சிராஜ், அக்சர் பட்டேல், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரேல், யாஷ் தயாள், ஹர்ஷித் ராணா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.