`பரியேறும் பெருமாள்’, `கர்ணன்’, `மாமன்னன்’ திரைப்படத்திற்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் திரைப்படம் `வாழை’.
தனது சிறுவயதின் அனுபவங்களைக் கதையாக வைத்து இத்திரைப்படத்தை எடுத்துள்ளார். இதற்காக `Navvi Studios’ தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். மாரி செல்வராஜின் மனைவி திவ்யா, இந்தத் தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியிருக்கும் இப்படம் நாளை (ஆகஸ்ட் 23ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது.
இதையொட்டி இப்படத்தின் பிரத்யேக காட்சி நேற்று திரையிடப்பட்டது. இதையடுத்து பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், “‘பரியேறும் பெரிமாள்’ திரைப்படத்தின் வெளியீட்டின் போது எப்படி ஒரு பதற்றமான மனநிலை இருந்ததோ, அதே மனநிலைதான் எனக்கு இப்போது இருக்கிறது. நாம் திரைப்படங்களை எடுத்து மக்கள் வரவேற்பைக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம். ஆனால், ஒரு சில படங்களுக்கு மட்டும்தான் மக்கள் வெறும் வரவேற்பை மட்டும் கொடுக்காமல், அதை மனதார ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்போம். ‘வாழை’ படத்தை மக்கள் மனதார ஏற்றுக் கொண்டு, வரவேற்பைக் கொடுக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
இந்தப் படத்தின் வழியே என்னை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று எடுக்கப்பட்ட திரைப்படம் இது. என்னுடைய சிறுவயது வாழ்வின் ஒரு வருடத்தை மட்டும் வைத்து இப்படத்தை எடுத்திருக்கிறேன். இப்படத்தின் இறுதிக் காட்சி என் வாழ்வின் மிகவும் முக்கியமான காட்சி. அதைப் படமாக்கும்போதே என் மனநிலை மிகவும் வலிகளுக்குள்ளானது. என்னுடைய அறிவை, அரசியலை இப்படத்தில் திணிக்கவில்லை. வலிமிகுந்த என் சிறுவயது வாழ்க்கையின் ஒரு பகுதியை கலைவடிவமாக மாற்றியிருக்கிறேன்.
‘இவனுக்கு என்னதான் பிரச்னை’, ‘ஏன் வலிகளையே பேசிக் கொண்டிருக்கிறான்’ என்று பல கேள்விகள் எல்லோரிடமும் இருக்கிறது. என்னைப் பற்றிய இதுபோன்ற கேள்விகளுக்கான பதிலாகத்தான் இப்படத்தை எடுத்திருக்கிறேன். சிறுதெய்வங்கள், நாட்டார் தெய்வங்கள் கதைகளைச் சிறுவயதில் நிறையக் கேட்டு வளர்ந்திருக்கிறேன். அதனால், ‘காட்டுப் பேச்சி’ போன்ற வலிகளுக்குள்ளாகப்பட்டு சமூகத்தால் கொலை செய்யப்பட்ட சிறுதெய்வங்கள் என் படங்களில் இயல்பாகவே இடம்பெற்றுவிடும்.
‘பரியேறும் பெருமாள்’ படத்தை ஏற்றுக் கொள்கிறவர்கள், ‘கர்ணன்’ திரைப்படத்தை வன்முறை என்று விமர்சிப்பது குறித்துப் பேசியவர், “மற்ற திரைப்படங்களில் வன்முறைகள் அதிகமாக இருப்பதை நல்ல தியேட்டர் அனுபவமாகப் பார்க்கிறார்கள். ஆனால், ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ போன்ற எனது திரைப்படங்களில் கொஞ்சமாக வன்முறை இருந்தாலும், கடுமையாக விமர்சிக்கிறார்கள். எளிய மனிதர்களின், நியாயமான கோபங்களை வன்முறை என்று கூறுகிறார்கள். இதுபோன்ற விமர்சனங்கள் ஒரு கலைஞனை, இயக்குநரை மிகுந்த நெருக்கத்திற்குள்ளாக்குகிறது” என்றார்.
மேலும், “விக்ரம் சார் பையன் துருவ் விக்ரமுடன் நான் பண்ணும் ‘காளமாடன் (Bison)’ படத்தின் பணிகள் 70% முடிவடைந்தது. விரைவில் முழுப்பணிகளும் நல்லபடியாக நிறைவடைந்து திரைக்கு வரும். ரஜினி சாரை எனக்கு ரொம்பப் பிடிக்கும், அவருக்கும் என்னை ரொம்பப் பிடிக்கும். என் எல்லா படங்களையும் பார்த்துவிட்டு, என்னை அழைத்துப் பாராட்டினார். ரஜினி சாரும், நானும் சேர்ந்து படம் பண்ணுவது குறித்து நிறையப் பேசி வருகிறோம். விரைவில் இது குறித்த நல்ல செய்தி வரும்!” என்றார்.