இணைய வழி ஊடாக ரயில் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்வதற்கான “pravesha” இணையத்தின் அறிமுகம் நேற்று (22) காலை தாமரை கோபுர வளாகத்தில், பிரதமர் செயலாளர் அநுர திஸாநாயக்க தலைமையில், போக்குவரத்தது மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் கங்கநாத் ரூபசிங்கவின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
இன்று (23) முதல் பயணிகள் வரிசையில் காத்திருக்காமல் www.pravesha.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக டிஜிட்டல் ரயில் டிக்கெட்டுக்களை இணையவழி ஊடாக கொள்வனவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ரயிலில் பயணிக்கும் இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடையே பயணிக்கத் தேவையான 2 மற்றும் 3ம் வகுப்பு டிக்கெட்டுகளை வங்கிகள் வழங்கும் டெபிட் அல்லது கிரெடிட் வங்கி அட்டைகளை பயன்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், பணம் செலுத்திய பிறகு, டிக்கெட்டின் QR குறியீடு பணம் செலுத்துபவரின் கையடக்கத் தொலைபேசிக்கு குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.
சம்பந்தப்பட்ட ரயில் நிலையத்தில் QR குறியீட்டை சரிபார்த்து, டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பயண நாளில் மாத்திரம் ரயிலில் பயணம் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். பயணத்தை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ள் பயணத் திகதிக்கு ஏழு நாட்களுக்கு முன்னதாகவே இந்த இணையதளத்தின் மூலம் டிஜிட்டல் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும்.
பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் ரஞ்சித் கங்கநாத் ரூபசிங்க மற்றும் ஏனைய அமைச்சின் செயலாளர்கள் மற்றும் புகையிரத திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் மக்கள் வங்கியின் தலைவர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.