பசுமை விகடன் மற்றும் மாமல்லபுரம் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய `மரப்பயிரும் பணப்பயிரே’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் செப்டம்பர் 16-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகேயுள்ள நடுவக்கரை கிராமத்தில் அமைந்திருக்கும் பகவான் பண்ணையில் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான விவசாயிகள் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.
இக்கருத்தரங்கில் அறிமுகவுரையாற்றிய மாமல்லபுரம் ரோட்டரி சங்கத்தின் தலைவரும் பகவான் பண்ணையின் உரிமையாளருமான மகேஷ்குமார்,
“செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நெல் சாகுபடிதான் அதிகளவில் நடைபெற்று வருகிறது. மரப்பயிர்கள் சாகுபடி செய்வதால் ஏற்படும் பலன்கள் குறித்து, இப்பகுதி விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். பசுமை விகடனுடன் இணைந்து இக்கருத்தரங்கத்தை நடத்துவதற்கு வாய்ப்பு கிடைத்ததை நினைத்து பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்நிகழ்ச்சியை என் வீட்டு விழாவாகவே கருதுகிறேன்.
இதில் கலந்துகொள்ள வந்திருக்கும் விவசாயிகளை என்னுடைய உறவினர்களாகவும் நண்பர்களாகவும் கருதுகிறேன். இதனால்தான் என் மகளின் திருமணத்திற்கு உணவு சமைத்த சமையல்காரரைக் கொண்டு இன்று மதிய விருந்து தயார் செய்துள்ளேன். நான் ஒரு சிற்ப கலைஞர். எனக்கும் விவசாயத்திற்கு எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் இருந்தது. 2019-ம் ஆண்டு, இயற்கை விவசாயி இறையழகன் தமிழ்ப் பண்ணையில் பசுமை விகடன் உறுதுணையுடன் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால்தான் எனக்கும் இதில் ஆர்வம் ஏற்பட்டு இப்பண்ணையை உருவாக்கினேன்’’ எனத் தெரிவித்தார்.
ரோட்டரி சங்கத்தை சேர்ந்தவரும் மாமல்லபுரம் சிற்ப கல்லூரியின் முன்னாள் முதல்வருமான முனைவர் ராஜேந்திரன் ‘‘மரங்களின் சிறப்புகளை நிறைய குறிப்பிடலாம். சிற்ப சாஸ்திரத்தில், சிலையோ, கட்டுமானமோ அமைக்கும்போது, உள்ளூர் பகுதியில் இயற்கையாக கிடைக்கக் கூடிய பொருள்களை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் அது நிலைத்து நீடித்து இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது’’ என்றார்.
ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்தவரும் ஐடியல் பீச் ரிசார்ட் நிர்வாக இயக்குநருமான போஸ் தர்மலிங்கம், ‘‘பசுமை சூழ்ந்த இந்த இடத்தில், மரம் வளர்ப்புக் குறித்த நிகழ்ச்சி நடைபெறுவதை கண்டு மகிழ்கிறேன். பல்வேறு பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் வந்துள்ளதைப் பார்க்கும் போது வியப்பாக உள்ளது. இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இந்த ஒரு நாள் கருத்தரங்கு மிகுவும் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகிறேன்.” என்றார்.
ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்த பாண்டியன் பேசுகையில், ‘‘ என் மனைவிக்கு மூலிகை செடிகள் மீது பிரியம் உண்டு. வீட்டில் பலவிதமான மூலிகைகளை வளர்த்து வருகிறார். குடும்பத்தில் யாருக்காவது உடல் நலக்குறைவு ஏற்பட்டால், அந்த மூலிகை சாறு குடித்தால் குணமாகிவிடுகிறது. இயற்கையுடன் இணைந்து வாழும்போது, உடலும் மனமும் ஆரோக்கியமாக உள்ளது’’ என்றார்.
கணேசன் பேசுகையில், “மரம் வளர்ப்பில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. ஆகையால்தான், நிலம் வாங்கி அதில் மரம் வளர்த்து வருகிறோம். மரங்கள் நிறைந்த இந்த இடத்தில் மரப்பயிர்கள் பற்றிய நிகழ்ச்சி நடைபெறுவது பொருத்தமாக உள்ளது’’ என்றார்.
கருத்தரங்கில் தலைமை உரையாற்றிய ரோட்டரி சங்க ஆளுநர் பரணிதரன், ‘‘பல்வேறு காரணங்களால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பசுமையைப் பரவலாக்கம் செய்வது காலத்தின் கட்டாயம்.
ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஆளுநராக நான் பொறுப்பேற்றதும்… 245 கிராமங்களில் ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு உலகச் சாதனை படைத்தோம். இந்தியாவில் உள்ள ரோட்டரி ஆளுநர்கள் சுற்றுச்சூழல் சார்ந்த திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார்கள். அதில் நானும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மாணவர்களுக்கு விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவும், விவசாயத்தைக் கற்றுத் தருவதற்காகவும் இந்த ஆண்டு வேலூரில் பெரிய அளவில் கருத்தரங்கு நடத்த உள்ளோம். அதில் பசுமை விகடனும் பங்கேற்க வேண்டும்” என்று அழைப்புவிடுத்தார்.
ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் சம்பத்குமார் பேசும்போது, ‘‘சில ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலையில் ரோட்டரி சங்கமும் பசுமை விகடனும் இணைந்து இயற்கை வேளாண்மை கருத்தரங்கு நடத்தினோம். மீண்டும் அதுபோலக் கருத்தரங்கு நடத்த விரும்புகிறோம்’’ எனத் தெரிவித்தார்.
சவுக்குச் சாகுபடி குறித்துப் பேசிய, தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தின் வனத்தோட்டத்துறை உதவி பொது மேலாளர் ரவி, “காகித தயாரிப்புக்குச் சவுக்கு, தைல மரங்களின் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தமிழ்நாடு காகித ஆலைக்கு ஒரு நாளைக்கு 3,500 டன் மரங்கள் தேவைப்படுகின்றன.
தமிழ்நாட்டில் உள்ள மற்ற காகித ஆலைகள் மற்றும் பிளைவுட் ஆலைகளுக்கு ஒரு நாளைக்கு 3,000 டன் சவுக்கு மற்றும் தைல மரங்கள் தேவைப்படுகின்றன. ஆகமொத்தம், தினமும் 6,500 டன் மரங்கள் தேவைப்படுகின்றன. ‘பண்ணைக்காடுகள்’ திட்டத்தின் மூலம் சவுக்கு மற்றும் தைல மர சாகுபடியை விவசாயிகளிடம் ஊக்கப்படுத்தி வருகிறோம். அறுவடை, போக்குவரத்து ஆகிய செலவுகளை ஆலையே ஏற்றுக்கொள்ளும். நாற்று நடுவதிலிருந்து அறுவடை வரையிலான அனைத்து தொழில்நுட்ப ஆலோசனைகளையும் எங்கள் நிறுவனமே செய்து தரும். இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல் விற்பனை செய்யலாம்.
விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணம் செலுத்தப்படுகிறது. இவ்வாறு முந்தைய ஆண்டில் மட்டும் நாங்கள் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு சுமார் 300 கோடி ரூபாய்ச் செலுத்தியுள்ளோம். தற்போது சவுக்கு மரங்களுக்கு ஒரு டன்னுக்கு 5250 ரூபாய் கிடைக்கிறது. ஒரு ஏக்கரில் சவுக்குச் சாகுபடி செய்தால், மூன்று ஆண்டுகள் முடிவில் குறைந்தபட்சம் 80 டன் மகசூல் கிடைத்தாலே, அதனை விற்பனை செய்வதன் மூலம் 4,20,000 ரூபாய் வருமானம் நிச்சயம் பெறலாம்.
சவுக்கு சாகுபடி தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் அதிக அளவு நடந்து வருகிறது. குறிப்பாக ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மூன்று தலைமுறைகளாக பயிர் செய்து பயன்பெற்று வருகிறார்கள்’’ என்றார்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி பலா விவசாயியும் ஓய்வுபெற்ற வேளாண் துறை துணை இயக்குநருமான ஹரிதாஸ் பேசும்போது, ’’ஒரு ஏக்கரில் 80- 100 பலா கன்றுகள் நட்டு வளர்த்தால் 6 ஆண்டுகளுக்குப் பிறகு பலாப்பழம் விற்பனை மூலம் ஓர் ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டலாம்.
வயது முதிர்ந்த, காய்ப்பு ஓய்ந்த பலா மரங்களை அறுவடை செய்து மர வேலைப்பாடுகளுக்குப் பயன்படுத்தலாம். பலா மரங்களுக்கு விற்பனை வாய்ப்புப் பிரகாசமாக உள்ளது. அதிக விலை கிடைக்கிறது’’ என்றார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகில் உள்ள தமிழ் நிலம், தமிழ்ப்பண்ணையின் முன்னோடி இயற்கை விவசாயி இறையழகன் பேசும்போது,
“இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரும் மரங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வந்தார். ஒரு வீட்டில் வேப்ப மரம், தென்னை, கொய்யா, பலா, பப்பாளி என்று பல வகையான மரங்கள் இருந்தால், அந்த வீட்டில் யாரும் பசியோடு இருக்க மாட்டார்கள்’ என்று சொல்வார்.எங்கள் பண்ணையில் பல வகையான மரங்களை வளர்த்து வருகிறோம். அதை உணவுக்காடு என்றுதான் அழைக்கிறோம்’’ என்றார்.
முன்னோடி இயற்கை விவசாயி `அரியனூர்’ ஜெயச்சந்திரன், ‘‘இயற்கை விவசாயத்தில் வெற்றிகரமாக லாபம் பார்க்க வேண்டுமென்றால், ரசாயன உரங்களைத் தவிர்த்தால் மட்டும் போதாது. உங்கள் பண்ணையில் கால்நடைகளும் மரப்பயிர்களும் கட்டாயம் இடம்பெற வேண்டும்’’ என்றார்.
நிறைவாக மதுராந்தகத்தைச் சேர்ந்த திருவேங்கடம் மரக்கன்றுகளை எப்படி நடவு செய்ய வேண்டும் என்று தன் அனுபவங்களைப் பகிர்ந்தார்.
மதிய விருந்து!
பசுமை சூழ்ந்த பகவான் பண்ணையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் உரை விருந்து நிறைவு பெற்றதும் மதிய விருந்தும் நடைபெற்றது. வழங்கப்பட்டது. அதில்… கவுனி அரிசி அல்வா, சீரகச்சம்பா அரிசியில் செய்யப்பட்ட காளான் பிரியாணி, வெள்ளரி ரைதா, வாழைப் பூ வடை, அகத்திக் கீரை துவையல், பரங்கிக்காய் காரகுழம்பு, சாம்பார் சாதம், வரகரிசி தேங்காய் சாதம், குதிரைவாலி தயிர்ச் சாதம், வெள்ளைப் பொன்னி ரசம் சாதம், இளநீர் பாயசம், அத்தி வத்தல், மோர் மிளகாய் ஆகியன இடம்பெற்றன.
கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களின் கருத்துக்கள்…
கணேஷ், திருக்கழுக்குன்றம்
“தொழிற்சாலை நடத்திக் கொண்டிருந்த என்னை இயற்கை விவசாயத்தின் பக்கம் அழைத்து வந்தவர்கள், இந்த மேடையில் உள்ளவர்கள்தான். எனக்கும் இது போன்ற ஒரு நிகழ்ச்சியில்தான் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்று தூண்டுதல் ஏற்பட்டது.
பசுமை விகடன் இதழில் வரும் தொழில்நுட்பங்களையும் பண்ணைகளையும் நேரில் சென்று பார்த்து நிறைய கற்றுக் கொண்டு வருகிறேன். என் பண்ணை பக்கத்தில்தான் உள்ளது. மரங்களுடன் பசுமை நிறைந்த இந்தப் பண்ணையைப் பார்த்த உடன் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. இரண்டு அமைப்புகளுக்கும் வாழ்த்துகள்!’’
கெளசல்யா, செங்கல்பட்டு.
‘‘இந்த நிகழ்ச்சிக்கு வந்த பிறகுதான் மரப்பயிர்களும் பணப்பயிர்கள்தான் என்று தெரிந்து கொண்டேன். எந்த நிலத்தில் என்ன மரங்கள் வளர்க்கலாம் என்று புரிந்தது.’’