குஜராத்தியர்கள் பெரும்பாலும் அதிக அளவில் வேலைக்கு செல்லாமல் சொந்த தொழில் செய்வதில் கவனம் செலுத்துகின்றனர். நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர்களான அம்பானி மற்றும் அதானி ஆகியோர் குஜராத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அதே போன்று குஜராத்தியர்கள் அதிக அளவில் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். ஆசியாவின் பணக்கார கிராமமும் குஜராத்தில்தான் இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள புஜ் பகுதியில் இருக்கும் மாதாபர் என்ற கிராமம் தான் அந்த பெருமைக்குரியது. இங்கு 32 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். 2011-ம் ஆண்டு இங்கு வெறும் 17 ஆயிரம் பேர்தான் இருந்தனர். ஆனால் கடந்த 13 வருடத்தில் மக்கள் தொகை ஏறத்தாழ இரண்டு மடங்காகிவிட்டது. இங்கு 17 வங்கிகள் தங்களது கிளைகளை திறந்துள்ளன. மேலும் சில வங்கிகள் இங்கு கிளைகள் திறக்க ஆர்வம் காட்டி வருகின்றன.
இங்குள்ள வங்கிகளில் இக்கிராம மக்கள் 7 ஆயிரம் கோடி அளவுக்கு வைப்புத்தொகை வைத்திருக்கின்றனர். இந்த அளவுக்கு இக்கிராமத்தில் உள்ள வங்கிகளில் பணம் டெபாசிட் செய்யப்படுவதற்கு முக்கிய காரணம் இங்குள்ள மக்களில் அதிகமானோர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். அவர்கள் வெளிநாடுகளில் இருந்து சம்பாதித்து தங்களது கிராம வங்கியில் டெபாசிட் செய்து கொண்டிருக்கின்றனர். இக்கிராமத்தில் 20 ஆயிரம் வீடுகள் இருக்கிறது. அதில் 1200 குடும்பங்கள் ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கின்றனர். மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் கட்டுமான தொழிலில் குஜராத்தியர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இது தவிர இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் இக்கிராமத்தை சேர்ந்த குஜராத்தியர்கள் கணிசமாக வசிக்கின்றனர். இக்கிராம மக்கள் அதிக அளவில் வெளிநாடுகளில் நிரந்தரமாக தங்கிவிட்டாலும் சொந்த ஊரின் மீது மிகுந்த பற்று வைத்திருக்கின்றனர். அதனால் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை அவர்கள் தங்கி இருக்கும் நாடுகளில் சேமிக்காமல் தங்களது சொந்த ஊரில் உள்ள கிராம வங்கிகளில் சேமித்து வருகின்றனர் என்று முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பாருல்பென் தெரிவித்துள்ளார்.
இக்கிராமத்தில் எங்கு பார்த்தாலும் பங்களாக்களைக்காண முடிகிறது. இக்கிராமங்களை சேர்ந்த ஒவ்வொருவரும் சராசரியாக ரூ. 22 லட்சம் அளவுக்கு வங்கிகளில் வைப்புத்தொகை வைத்திருக்கின்றனர்.