சென்னை: “கால் உடைந்த நிலையில், கடந்த 19-ம் தேதி அன்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிவராமனுக்கு, ஐந்து நாட்களாக உடலில் வேறு பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது தெரியவில்லையா? கடந்த ஜூலை மாதம் சிவராமன் எலி மருந்து தின்று தற்கொலை முயற்சி செய்திருப்பதாகத் தெரிய வருகிறது. தற்போது அதனைப் பயன்படுத்தி, இந்தப் பாலியல் வன்கொடுமை குற்றத்தில் தொடர்புடைய வேறு யாரேனும் முக்கியப் புள்ளிகளைக் காப்பாற்ற, சிவராமன் எலி மருந்து தின்றதால் மரணமடைந்து விட்டார் என்று கூறப்படுகிறதோ என்ற கேள்வி வலுவடைகிறது,” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, போலி என்சிசி முகாம் நடத்தி, பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான சிவராமன் எலி மருந்து சாப்பிட்டதால் இன்று காலை உயிரிழந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகின. கடந்த 19-ம் தேதி அன்று அவர் கைது செய்யப்பட்டதும், தப்பியோட முயற்சித்ததாகக் கூறி, கால் உடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அப்போது, அவர் எலி மருந்து சாப்பிட்டது குறித்து எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை. அவரது உடல் நலனும் எந்த பாதிப்புக்குள்ளானதாகத் தெரியவில்லை. அவர் கைது செய்யப்படப்போவதை அறிந்ததும், கடந்த 16 மற்றும் 18 ஆகிய இரு தினங்களும் எலி மருந்து உண்டதாக, திடீரென்று வியாழக்கிழமை மாலை முதல், செய்திகள் வெளியாகின. இன்று காலை அவர் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் எலி மருந்து சாப்பிட்டதாகக் கூறப்படுபவர், நேற்று மாலை வரை, ஐந்து நாட்களாக, எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருந்தார் என்பது மர்மமாக இருக்கிறது. அவர் எலி மருந்து உண்டதாக, திடீரென்று நேற்று மாலை முதல் செய்திகள் வெளியானதும், சந்தேகத்தை எழுப்புகிறது. கால் உடைந்த நிலையில், கடந்த 19-ம் தேதி அன்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவருக்கு, ஐந்து நாட்களாக, உடலில் வேறு பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது தெரியவில்லையா?
கடந்த ஜூலை மாதம், சிவராமன், எலி மருந்து தின்று தற்கொலை முயற்சி செய்திருப்பதாகத் தெரிய வருகிறது. தற்போது அதனைப் பயன்படுத்தி, இந்தப் பாலியல் குற்றத்தில் தொடர்புடைய வேறு யாரேனும் முக்கியப் புள்ளிகளைக் காப்பாற்ற, சிவராமன் எலி மருந்து தின்றதால் மரணமடைந்து விட்டார் என்று கூறப்படுகிறதோ என்ற கேள்வி வலுவடைகிறது. இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, முழுமையான விசாரணை நடத்தி, இந்தக் குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்,” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, சிவராமன் மரணம் குறித்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான காவேரிப்பட்டணம் காந்தி நகர் காலனியைச் சேர்ந்த சிவா (எ) சிவராமன் (35) என்பவரை கடந்த 19-ம் தேதி, கிருஷ்ணகிரி தேவசமுத்திரம் அருகே பொன்மலை கோயிலில் கைது செய்ய முயற்சித்த போது, போலீஸாரிடம் இருந்து தப்பியோட முயற்சி செய்தார்.
அப்போது அவருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதன் காரணமாக, அன்றைய தினம் அதிகாலை 2 மணியளவில், சிவராமன் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து காலை 3 மணியளவில், பர்கூர் போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். இந்த விசாரணையின் போது, சிவராமன் கைது செய்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு எலி மருந்து உட்கொண்டதாக ஒப்புக்கொண்டார்.
அவர் எலி மருந்தை உட்கொண்டதை மருத்துவர்கள், அவரது மெடிக்கல் அறிக்கையில் குறிப்பட்டுள்ளனர். கடந்த 21-ம் தேதி மதியம் 12.15 மணிக்கு, மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவக் கல்லூரிக்கு சிவராமன் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு 2 நாட்கள் டயாலிஸ்சிஸ் சிகிச்சை வழங்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை சுமார் 5.30 மணியளவில் சிவராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், இவர் குடும்பப் பிரச்சினை காரணமாக கடந்த ஜூலை மாதம் 9-ம் தேதி எலி மருந்து சாப்பிட்டு, கிருஷ்ணகிரியில் உள்ள டிசிஆர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 17-ம் தேதி வீடு திரும்பி உள்ளார். சிவராமன், அவரது தந்தை அசோக்குமார் இறப்பு குறித்து ஏதேனும் தவறான செய்திகள் பரப்புவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது. குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, “கிருஷ்ணகிரி தந்தை, மகன் இருவரின் மரணங்கள் காவல் துறை நடத்தும் நாடகமோ என்ற சந்தேகமும் எழுகிறது. சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில், சிவராமன் இந்த பாலியல் குற்றத்தில் தொடர்புடைய முக்கியப் புள்ளிகளின் பெயர்களை வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில், அவர் கொல்லப்பட்டிருக்கலாமோ என்று பொதுமக்களால் கேள்வி எழுப்பப்படுகிறது,” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். | அதன் விவரம்: ‘கிருஷ்ணகிரி வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை காக்க முயற்சி?’ – சிவராமன் மரணமும், இபிஎஸ் கேள்விகளும்