மதுரையிலுள்ள ஒரு கிராமத்தில் மீனா (அன்னா பென்) என்கிற பெண் பித்துப்பிடித்த மனநிலையில் வீட்டில் உட்கார்ந்திருக்கிறார். அவரை திருமணம் செய்துகொள்ளப் போகும் மாமன் மகன் பாண்டி (சூரி) குடும்பத்தாரின் அறிவுறுத்தலால் பாலமேட்டில் இருக்கும் சாமியாரிடம் இதற்கான தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறார். இதனால் இருவீட்டாரும் ஒரு ஆட்டோ மூன்று இருசக்கர வாகனங்களை எடுத்துக்கொண்டு குலசாமி கோயில் வழியே அந்தச் சாமியாரைக் காணப் பயணப்படுகிறார்கள். அந்தப் பயணத்தில் என்னென்ன நடக்கிறது, மீனாவுக்கு உண்மையிலேயே பேய் பிடித்திருக்கிறதா போன்ற பல கேள்விகளை முன்வைத்து அதற்கு நம்மையே விடைக் காண வைக்கும் முயற்சியே இந்த `கொட்டுக்காளி’.
இமை மூடாமல் நிலை குத்தி வெறித்துப்பார்க்கும் மனநிலை, பார்வையிலேயே ஆயிரம் யோசனைகளைக் கடத்தும் கண்கள், எந்தக் காட்சியிலும் வசனங்களே இல்லாவிட்டாலும் என்ன சொல்லவேண்டுமோ அதைப் தன் உணர்ச்சிகளாலேயே கடத்தியிருக்கிறார் அன்னா பென். குறிப்பாக ஓர் இடத்தில் சிரிப்பு, “இவங்க அடிக்க மட்டுமா செய்யுறாங்க” என்று பேசிய ஒற்றை வசனம் ஆகியவை ஆணாதிக்கத்துக்கு இந்த ‘கொட்டுக்காளி’ அளித்த உக்கிரமான கொட்டு. கரகரத்த குரல், சந்தேக பார்வை, கிராமத்து அடாவடி ஆளின் வீராப்பு எனப் பாண்டியாக உருமாறியிருக்கிறார் சூரி. இடைவேளைக்கு முந்தைய காட்சியில் அவரது கோபம் திரையைத் தாண்டி நடுங்க வைக்கிறது.
சூரியின் தந்தையாக வரும் புதுகை பூபாலன் ஒன்றிரண்டு வசனங்கள் பேசினாலும் கவனிக்க வைக்கிறார். கையறுநிலையாகத் தவிக்கும் மீனாவின் தாயாக நடித்துள்ள சாந்தி கதாபாத்திரமும் மனதில் ஆழப் பதிகிறது. குடும்ப உறுப்பினர்களாக நடித்த பலர் பரீட்சயப்பட்ட முகம் இல்லையென்றாலும், நடித்ததே தெரியாதது போல வாழ்ந்திருக்கிறார்கள். குறிப்பான சூரியின் சகோதரிகளில் ஒருவராக வரும் முத்துலெட்சுமியின் நடிப்பில் அத்தனை யதார்த்தம்! அந்தச் சேவலையும் சில காட்சிகளில் நடிக்க வைத்தது பிரமிப்பே!
பின்னணி இசை இல்லையென்றாலும் படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அதை மறக்கடிக்கும் அளவுக்கான ஒலிவடிவப்பை கொடுத்து அசத்தியிருக்கிறது சுரேன் மற்றும் அழகிய கூத்தன் கூட்டணி. இயக்குநரின் தைரியமான முடிவுக்கு இவர்கள் கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்கள். ஓடும் வண்டிச் சத்தம், சலசலக்கும் ஆறு, மணியோசை, கொக்கரிக்கும் சேவல் என நம்மைப் படத்தைவிட்டு விலகாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.
ஒரு சிறிய பயணத்துக்குள் அனைவரின் எண்ண ஓட்டத்தையும் நகர்ந்துகொண்டே பதிவு செய்திருக்கிறது ஒளிப்பதிவாளர் பி.சக்திவேலின் கேமரா கண்கள். கண்ணில் விழுந்த பூச்சி நம் கண்ணையே உறுத்தும் காட்சியும், உடன் பயணித்த உணர்வைத் தரும் சிங்கிள் ஷாட் காட்சிகளுமே அதற்குச் சாட்சி. படத்தொகுப்பாளர் கணேஷ் சிவா ஒரு கரிக்கட்டை மெல்லக் கங்காய் மாறித் தகிக்கும் சூட்டினை இந்தப் படைப்புக்குத் தந்திருக்கிறார்.
மதுரை வட்டார வழக்கில் பிடிவாதமாக இருக்கும் நபரை ‘கொட்டுக்காளி’ என்று அழைப்பது வழக்கம். ‘இந்தக் கதையில் யார் கொட்டுக்காளி?’ என்ற கேள்விக்கான பதிலைத் தனது முந்தைய படைப்பான ‘கூழாங்கல்’லினைப் போல கலைரீதியான அணுகுமுறையோடு ஆழமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ். கதையாக எழுதப்போனால் இரண்டு வரிகளில் முடிகிற கருவினை, வித்தியாசமான திரைக்கதையால் ஒரு முழு நீளப்படமாக வார்த்திருக்கிறது படக்குழு. நாயகியை வெறித்துப் பார்க்கும் சேவல், கட்டப்பட்டிருக்கும் கல்லிலிருந்து அறுத்துக்கொண்டு ஓடும் அதனை உறவினர் பிடித்து மீண்டும் கட்டும் இடம், ஆண்கள் எல்லோரும் சுதந்திரமாகப் பரந்த வெளியில் காற்றை அனுபவித்து வண்டி ஓட்டுமிடத்தில், பெண்கள் ஷேர் ஆட்டோவுக்குள் அடைக்கப்பட்ட இடமென உருவகங்கள் வலிந்து திணிக்கப்படாமல் போகிற போக்கில் ஆணாதிக்க கட்டமைப்பை உலுக்குகிறது. ஆணாதிக்கம் ஆணிடம் மட்டுமல்ல, பெண்களிடமிருந்தும் எட்டிப் பார்க்கும் என்பதாய் அழகாய் விளக்குகின்றன பெண்கள் பேசும் வசனங்கள்!
“தாய் மாமன் சீர் கொண்டு வாராண்டி”, “ஒத்தையடி பாதையில” ஆகிய பாடல்களை வைத்துக் கதை சொன்ன விதமும் சிறப்பு. ஒரு திரைக்கதையின் முடிச்சை ஒலியை வைத்தும் அவிழ்க்கமுடியும் என்று செய்துகாட்டியது அபாரமான காட்சியமைப்பு.
ஒட்டுமொத்த படத்திலும் அழுகின்ற கதாபாத்திரமாகச் சிறுவன் ரிஹான் சிந்திய சில துளி கண்ணீர், குடும்ப வன்முறை என்கிற உடைக்கமுடியா கண்ணாடியின் மீது எறியப்பட்ட கூழாங்கல். ஆற்றங்கரையோரம் அன்னா பென், தன்னைத்தானே சுதந்திரமாகப் பார்க்கின்ற இடமும், பிறகு அதனை விட்டுத் தொலைவில் செல்கிற விதமும், அது படமாக்கப்பட்ட விதமும் ஒரு பெண்ணின் மனதுக்கும் குடும்ப மானத்துக்கும் நடத்தப்பட்ட போர். ஆண்கள் புறணி பேசும் உலகு, நவீனங்கள் தொழில்நுட்பமாகக் கிராமத்துக்கு வந்து சேர்ந்தாலும், எண்ணங்களில் மண்டி கிடைக்கும் பழைமைவாதம், சிறுநீர் கழிப்பதிலும் ஆண்களுக்கு இருக்கும் சுதந்திரம், வீர வசனம் பேசுபவர்கள் மாட்டைக் கண்டு பயந்து நிற்க, சிறுமி ஒருவள் அதைச் செல்லமாகக் கடிந்துகொண்டே பிடித்துச் செல்லும் காட்சி எனப் பல்வேறு அடுக்குகளாய் நம் மனதில் கற்பிக்கப்பட்ட கற்பிதங்களை உடைத்திருக்கின்றன காட்சித் தொகுப்புகள்.
இப்படி ஆணாதிக்கம், மூட நம்பிக்கை, சாதியாதிக்கம், பாலின சமத்துவமின்மை எனப் பல தளங்களில் சமரசமில்லாமல் யதார்த்தமாக உலக அரங்கமே அதிரும்படி அடித்து ஆடியிருக்கிறார் இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ். இனி சர்வதேசம் என்பது மதுரை பாலமேட்டுக்கு அருகில்தான் இருக்கிறது என்று உரக்கப்பேசி மண்ணின் கதைகளை எடுக்க இளம்படைப்பாளிகளுக்கு வினையூக்கியாகியிருக்கிறார். நீண்டுகொண்டே போகும் பயணத்தில் படத்தை நீளச் செய்யச் சேர்க்கப்பட்ட சில காட்சிகள், விடாப்பிடியாக ஒரு காட்சி சொல்லவரும் விஷயம் முடிந்த பிறகும் தேவைக்கு அதிகமாக நீளும் சில ஷாட்கள் போன்றவை சிறு குறைகள் என்றாலும் இந்தத் திரைமொழியின் தன்மையே அத்தகையதுதான் என்பதால் அவை அதிகம் உறுத்தவில்லை.
கலை ரீதியாகச் சிறந்த திரையனுபவத்தைக் கொடுத்திருக்கும் இந்த கொட்டுக்காளி, `ஆதிக்க பிடிவாத பேய்’ என்பது இந்தச் சமூகத்துக்குத்தான் பிடித்திருக்கிறது என்று நம்மை ஓங்கிக் கொட்டியிருக்கிறாள்!