இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான பாராளுமன்றத் தூதுக் குழு கடந்த 2024.08.11 முதல் 2024.08.14 ஆம் திகதி வரை மாலைதீவு குடியரசிற்கு விஜயம் செய்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மாலைதீவு மக்கள் மஜ்லிஸின் (பாராளுமன்றத்தின்) சபாநாயகர் கௌரவ அப்துல் ரஹீம் அப்துல்லா விடுத்த அழைப்பின் பேரில் இந்த உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த விஜயத்தின் போது ஆகஸ்ட் 13 ஆம் திகதி கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள் மாலைதீவுக் குடியரசின் ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு அவர்களை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஆழமாக வேரூன்றிய நட்புறவைக் குறிப்பிட்ட மாலைதீவு ஜனாதிபதி சபாநாயகரையும் அவரது தூதுக்குழுவினரையும் அன்புடன் வரவேற்றார். இதன்போது, நாட்டின் அபிவிருத்தி மற்றும் செழிப்புக்கு மேலும் பங்களிக்கும் சாதகமான விளைவுகளுடன் கூடிய இலங்கையில் அமைதியான ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் என தாம் எதிர்பார்ப்பதாக மாலைதீவு ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
அத்துடன், மக்கள் மஜ்லிஸின் சபாநாயகர் கௌரவ அப்துல் ரஹீம் அப்துல்லா அவர்களுடன் தூதுக் குழுவினர் உயர்மட்டக் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், இதன்போது இரு தரப்பினரும் பாராளுமன்ற ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர். இரு நாடுகளின் பொருளாதார செழிப்புக்கு சுற்றுலா மற்றும் மீன்பிடித் துறை ஆகிய முக்கிய துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, இவ்விரு துறைகளினதும் மேம்பாடு குறித்தும் கலந்துரையாடப்பட்டது. மாலைதீவின் சட்டமியற்றும் செயல்முறைகள் பற்றிய விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இலங்கை சபாநாயகர் தலைமையிலான குழுவினருக்கு மக்கள் மஜ்லிஸின் விரிவான சுற்றுப்பயணமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான தூத்துக் குழு, மாலைதீவின் கலாச்சாரப் பாரம்பரியம் மிக்க தேசிய அருங்காட்சியகம், எயார் டக்ஸி டெர்மினல் மற்றும் ‘ஹுல்ஹூமலே’ அபிவிருத்தித் திட்டம் உள்ளிட்ட மாலைதீவின் முக்கிய கலாச்சார மற்றும் உட்கட்டமைப்பு ரீதியாக முன்னேற்றமடைந்த பிரதான தளங்களையும் பார்வையிட்டனர். பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்புக்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பு, இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான மற்றும் கூட்டுறவைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த விஜயம் இடம்பெற்றிருந்தது.
இந்த விஜயத்தில் பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பிரியங்கர ஜயரத்ன, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.