சென்னை வெளிவட்டச் சாலை பகுதிகளின் பொருளாதார செயல்பாடுகளை மேம்படுத்த திட்டம் தயாரிப்பு: சிஎம்டிஏ

சென்னை: சென்னை வெளிவட்டச் சாலையில் மீஞ்சூர், செங்குன்றம், பூந்தமல்லி, வண்டலூர் பகுதிகளில் பொருளாதார செயல்பாடுகளை மேம்படுத்தும் விதமாக விரிவான வளர்ச்சித் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, இன்று அவர் தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்ட தகவல்: “சென்னை வெளிவட்டச் சாலை வழித்தடம் என்பது சென்னை பெருநகர பகுதியின் இடம் சார்ந்த திட்ட உத்தியில் முக்கியமான பாகமாகும். தற்போது நாங்கள் வெளிவட்டச் சாலையை முக்கியமான வளர்ச்சி வழித்தடமாக மாற்றும் வகையில், இருபுறமும் ஒரு கி.மீ அகலத்தில், 62 கி.மீ நீளத்துக்கு அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரித்துள்ளோம். வெளிவட்டச்சாலை வழித்தடத்தின் வளர்ச்சித் திறனை மேம்படுத்தும் வகையில், நாங்கள், மீஞ்சூர், செங்குன்றம், பூந்தமல்லி, வண்டலூர் ஆகிய 4 குறிப்பிட்ட பகுதிகளை அவற்றின் தனித்துவமான பொருளாதார சூழல்களை கருதி கண்டறிந்துள்ளோம்.

இந்த பகுதிகளுக்கு ஏற்றவாறு பொருளாதார நடவடிக்கைளை கலவையாக நாங்கள் வகுத்துள்ளோம். இப்பகுதிகளில் ஒருங்கிணைந்த அணுகுமுறையை உறுதிசெய்ய, தொழில்துறை, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், சிப்காட், டிட்கோ மற்றும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பு (கும்டா) ஆகியவற்றுடன் இணைந்து எதிர்பார்க்கப்படும் வளர்ச்சிக்கான குறுகிய கால மற்றும் இடைக்கால வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி வருகிறோம்.

இந்த வழித்தடத்துக்கான சரியான வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக 10 நிலம் சேகரிப்பு குழுமப் பகுதிகளை கண்டறிந்துள்ளோம். ஒருங்கிணைந்த செயல்பாட்டு மையங்கள், மலிவு விலை குடியிருப்பு, தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை ஊக்குவிக்க போக்குவரத்து சார்ந்த வளர்ச்சியிலும் கவனம் செலுத்துகிறோம்.

மேலும், பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையம் போன்ற எதிர்கால திட்டங்கள் மற்றும் தற்போதுள்ள திட்டங்களை உள்ளடக்கி, வெளிவட்டச்சாலையுடன் கூடுதலாக, மல்டி மாடல் போக்குவரத்து திட்டங்களையும் இணைத்து செயல்படுத்தும் திட்டமும் உள்ளது. மேலும், இந்தத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான உத்திகள் மற்றும் நிதி வழிமுறைகளுக்காக வெளிவட்டச்சாலைக்கான பொருளாதார திட்டத்தை தயாரித்து வருகிறோம். வரும் அக்டோபர் மாத இறுதிக்குள், விரிவான வளர்ச்சித்திட்டத்தின் வரைவை இறுதி செய்யவேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளோம்,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.