நேபாளத்தில் இந்தியப் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 14 பேர் உயிரிழப்பு

காத்மாண்டு: நேபாளத்தில் 40 பயணிகளுடன் பயணித்த இந்திய பதிவெண் கொண்ட பயணிகள் பேருந்து ஒன்று ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேபாளத்தில் 40 பேருடன் பயணித்த இந்திய பயணிகள் பேருந்து ஒன்று தனாஹுன் மாவட்டத்தில் உள்ள மர்ஸ்யாங்டி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தை நேபாள காவல் துறை உறுதி செய்துள்ளது. இந்த விபத்தில், 14 பேர் பலியானதாகவும், 16 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தனாஹுன் மாவட்டத்தின் டிஎஸ்பி தீப்குமார் ராயா கூறுகையில், “UP FT 7623 என்ற உத்தரப் பிரதேச மாநில பதிவெண் கொண்ட அந்தப் பேருந்து மர்ஸ்யாங்டி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. பேருந்து பொக்காராவில் இருந்து காத்மாண்டு நோக்கி சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது” என்றார். 45 போலீஸார் கொண்ட குழு விபத்து நடந்த இடத்துக்குச் சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

முன்னதாக, கடந்த ஜூலை மாதம் நேபாளத்தின் திரிசூலி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 2 பேருந்துகள் அடித்துச் செல்லப்பட்டன. சித்வான் மாவட்டம் சிமல்தல் பகுதியில் நாராயண்காட் – மக்லிங் சாலையில் கடந்த 12-ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அவ்வழியாக சென்ற 2 பேருந்துகள் நிலச்சரிவில் சிக்கி அருகில் உள்ள திரிசூலி ஆற்றுக்குள் கவிழ்ந்தன. அதில் இந்தியர்கள் உள்பட பலர் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த மாதமும் வெள்ளத்தில் ஒரு பேருந்து சிக்கி விபத்துக்குள்ளானது அங்கு நடந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தில் இது பருவமழை காலம் என்பதால் அங்கு பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.