திருப்பூர் கோவில்வழியைச் சேர்ந்த 26 வயது பெண், நல்லூர் போலீஸாரிடம், தனது கணவர் பவித்ரனை 6 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றதாகவும், அதில் சிலர் போலீஸார் சீருடையில் இருந்ததாகவும் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், கடத்தப்பட்ட பவித்ரன் இணையத்தின் மூலம் பாலியல் தொழில் நடத்தி வருவதும், இதனால் தங்களுக்கு ரூ.2 லட்சம் பணம் தர வேண்டும் எனக் கூறி, அவரை சிலர் கடத்திச் சென்றதும் தெரியவந்தது. அதையடுத்து, பெருமாநல்லூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பவித்ரனை போலீஸார் மீட்டனர்.
மேலும், அந்த வீட்டில் இருந்த 6 பேரை போலீஸார் கைதுசெய்து விசாரித்ததில், திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றும் காவலர்கள் சோமசுந்தரம் (31), கோபால்ராஜ் (33) மற்றும் நீலகிரி மாவட்டம், தேவாலா சோலூர் மட்டத்தில் பணியாற்றும் காவலர் லட்சுமணன் (32), இவர்களின் நண்பர்களான ஜெயராம் (20), ஹரீஸ் (25) மற்றும் அருண்குமார் (24) ஆகிய 6 பேரும் சேர்ந்து இந்தக் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.
காவலர்கள் மூன்று பேரும் 2011-ல் பணிக்குச் சேர்ந்தவர்கள். இணையத்தின் மூலம் நடைபெறும் பாலியல் தொழிலைக் கண்காணித்து அதில் ஈடுபடுவோரைக் கடத்திப் பணம் பறித்து வந்துள்ளனர். அந்த வகையில் பவித்ரனைக் கடத்தியுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து மூன்று காவலர்கள் உட்பட 6 பேரையும் நல்லூர் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.