பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து புதன்கிழமை நாடு முழுவதும் உள்ள 21 அமைப்புகள், நாடு தழுவிய போராட்டம் நடத்த பாரத் பந்த்க்கு அழைப்பு விடுத்தன. இதனால் பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், கேரளாவில் ஒரு சில இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. ராஜஸ்தானிலும் பாதிப்பு ஏற்பட்டது. ஒடிசாவில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பீகாரில் பல இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. வாகனங்கள் மறிக்கப்பட்டன. பல இடங்களில் தடியடி நடத்தப்பட்டது.
இந்த நிலையில்தான் பீகாரில் பள்ளிப் பேருந்துக்கு தீ வைக்க முயன்ற சம்பவம் அரங்கேறியது. பீகாரின் கோபால்கஞ்ச் பகுதியில், போராட்டக்காரர்கள் பள்ளி வாகனத்தை முற்றுகையிட்டனர். அந்தப் பள்ளி வாகனம் முழுவதும் பள்ளி மாணவர்கள் இருந்தனர். அப்போது ஒருவர் டயரைக் கொளுத்தி, பள்ளி வாகனத்துக்குக் கீழே போட்டிருக்கிறார். இதைக் கவனித்த காவல்துறையினர், உடனே அந்தப் பள்ளி வாகனத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும், அந்தப் பகுதியில் இருந்த போராட்டக்காரர்களை தடியடி நடத்தி அப்புறப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ காட்சி பார்ப்போரின் நெஞ்சைப் பதறவைக்கிறது.