1946 ஆம் ஆண்டு முதல் தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் அமுலில் உள்ளதாகவும், அரச ஆணையின் 70 ஆவது பிரிவின்படி ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தலுக்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகளைக் காட்டும் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை தேர்தல் முடிந்த 31 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (23) இடம்பெற்ற தேர்தல் செலவு ஒழுங்குமுறைச் சட்டம் மற்றும் தேர்தல் பிரசார செலவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்..
உரிய தகவல்களை ஒப்படைக்காமை, பொய்யான தகவல்களை கையளித்தல், சில தகவல்களை உள்ளடக்காமை போன்ற விடயங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதுடன், குடியுரிமைகளையும் மீளப்பெற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சட்டம் 1947 முதல் 1977 வரை இருந்ததாகவும், எளிய பெரும்பான்மை வாக்கு முறை இருந்த காலகட்டத்தில், வேட்பு மனு கையளிப்பதில் இருந்து வேட்பாளர் தேர்தல் அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொண்டிருந்ததாகவும், வேட்பாளர் தனது வெற்றிக்காக வேண்டி அனைத்து செலவுகளையும் மேற்கொண்டதாகவும்; அவர் சுட்டிக்காட்டினார்.
1978ஆம் ஆண்டு இரண்டாவது குடியரசு அரசியலமைப்பின் மூலம் அதுவரை இருந்த தேர்தல் முறை மாற்றப்பட்டு விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் தேர்தலை நடத்த ஆரம்பித்த பின்னர் கட்சியின் செயலாளர் அல்லது சுயேச்சைக் குழுவின் தலைவர் வேட்புமனுக்களை வழங்க வருவார். மேலும் இந்த அமைப்பில் வேட்பாளருக்கும் தேர்தல் அதிகாரிகளுக்கும் நேரடித் தொடர்பு இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
1976 இல் எல். எம்.டி.சில்வா எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் படி இலங்கை 160 தேர்தல் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளதுடன், 1978ஆம் ஆண்டு இலங்கை 22 தேர்தல் தொகுதிகளாக பிரிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், விகிதாச்சார வாக்கு முறை நடைபெறும் தேர்தல்களில் குழுவாகப் போட்டியிட்டு, அந்தந்த அரசியல் கட்சிகள் தொகுதிகளில் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் உறுப்பினர்களைத் தீர்மானிப்பதாக அவர் விளக்கினார்.
இந்த பிரதிநிதித்துவ வாய்ப்புகள் தீர்மானிக்கப்பட்டு அதுவரை இருந்த அரசியல் கலாசாரம் முற்றாக மாற்றப்பட்டு இந்த விடயங்கள் அனைத்தும் பணத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட ஆரம்பித்ததன் பின்னரே விருப்புரிமை முறை அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இத்தேர்தல் முறையில் குடிமக்கள் தங்களுக்கு கிடைப்பவற்றை அடிப்படையில் வாக்குகளைப் பயன்படுத்தப் பழகிவிட்டனர் என்று கூறிய தேர்தல் ஆணையாளர், அரசியல்வாதிகள் சில விடயங்களைக் கொடுத்து வாக்குகளைப் பெற முயல்வதால், வாக்களிப்பதில் பணம் ஒரு தீர்க்கமான காரணியாக மாறியுள்ளது என்றும், வாக்காளர்கள் தாம் பெறுவதை அடிப்படையாகக் கொண்டு வாக்களிக்கத் தூண்டப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக அதிகளவில் பணம் புழங்க ஆரம்பித்துள்ளதாகவும், குறிப்பிட்ட தொகையை வழங்கி வாக்குகளை பெற்றுக்கொண்ட பின்னர், வாக்காளர்களுக்கும் அரசியல்வாதிக்கும் இடையில் காணப்பட்ட சமூக ஒப்பந்தம் அத்துடன் முற்றுப்பெறுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஒற்றைத் தேர்தல் முறையின் போது இவ்விரு கட்சிகளுக்கும் இடையில் இருந்த சுமூக உறவு தற்போது இல்லை என்று சுட்டிக்காட்டிய தேர்தல் ஆணையாளர், தற்காலத்தில் பணத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய நிலைமை காணப்படுவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.