Doctor Vikatan: எனக்கு ஒவ்வொரு பீரியட்ஸின்போதும் நாளொன்றுக்கு 10 நாப்கின்கள் வரை செலவாகின்றன. ஆனால், என் தோழியோ, ஒரு நாளைக்கு வெறும் இரண்டு நாப்கின்கள் மட்டுமே உபயோகிப்பதாகச் சொல்கிறாள். எத்தனை நாப்கின்கள் வரை உபயோகிப்பது நார்மல்…? ஒரு நாப்கினை எத்தனை மணி நேரம்வரை பயன்படுத்தலாம்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.
சாதாரணமாக, பெரும்பாலான பெண்களுக்கும் மாதவிலக்கின் இரண்டாவது மற்றும் மூன்றாவது நாளில் ப்ளீடிங் சற்று அதிகமாக இருக்கும். பீரியட்ஸின்போது ஒவ்வொரு நான்கு அல்லது ஐந்து மணிநேரத்துக்கொரு முறை நாப்கினை மாற்ற வேண்டியது அவசியம். இந்த அறிவுரையானது, ப்ளீடிங் அதிகமிருந்தாலும், குறைவாக இருந்தாலும் பின்பற்றப்பட வேண்டியது. அந்த வகையில் பீரியட்ஸின் இரண்டாவது நாளில் 6 முதல் 7 நாப்கின்கள்வரை மாற்றுவதை இயல்பானது என எடுத்துக்கொள்ளலாம். அப்படி மாற்றுவதுதான் சுகாதாரமானதும்கூட.
ஒரு நாளைக்கு 10 முதல் 15 நாப்கின்கள்வரை உபயோகிக்கிறீர்கள் என்றால் அது நிச்சயம் அசாதாரணமானதுதான். மாதவிலக்கின்போது வெளியேறும் ரத்தம் கட்டியாக இருக்காது. அதுவே கட்டிகளாக வந்தால் ப்ளீடிங் அதிகமிருப்பதாக அர்த்தம். அந்தக் கட்டிகள் ஒரு இன்ச்சைவிட பெரிதாக இருந்தாலோ, வலியோடு வெளியேறினாலோ அது சாதாரணமானதல்ல என அர்த்தம். பீரியட்ஸின் ஆரம்பத்தில் லேசான திட்டுத்திட்டாக, இளம்சிவப்பு நிறத்தில் ப்ளீடிங் இருக்கும். போகப்போக அடர் சிவப்பு நிறத்தில் அதிக ப்ளீடிங் ஆகும். முடியும்போது பிங்க் நிறத்துக்கு மாறி, கடைசியில் வெள்ளையாக மாறும்.
பொதுவாக நான்கு முதல் ஐந்து மணி நேரத்துக்கு மேல் ஒரே நாப்கினை வைத்திருந்தால் முதலில் கெட்ட வாடை வரத் தொடங்கும். நாப்கின் தயாரிக்கப்படும் மெட்டீரியலானது உங்கள் ஆரோக்கியத்துக்கு அவ்வளவு பாதுகாப்பானதல்ல.
மைக்ரோ பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படும் நாப்கின்கள் மண்ணில் மட்குவதே கடினம். அப்படிப்பட்ட மெட்டீரியலில் ரத்தமும் சேர்ந்து, அத்துடன் நீண்ட நேரம் இருக்கும்போது கிருமித் தொற்றை நீங்களே வரவேற்கிறீர்கள் என அர்த்தம். பாக்டீரியா தொற்று ஏற்பட்டு, வெஜைனாவில் புண்களை ஏற்படுத்தலாம். அந்தத் தொற்று கர்ப்பப்பை, சினைக்குழாய்களைக்கூட பாதிக்கலாம். மென்ஸ்டுரல் கப் உபயோகிப்பவர்கள் ப்ளீடிங்கின் அளவைப் பொறுத்து 12 மணி நேரத்துக்கொரு முறைகூட மாற்றலாம்.
சில பெண்களுக்கு பீரியட்ஸ் முழுவதிலுமே ப்ளீடிங் மிகக் குறைவாக இருக்கலாம். ‘ப்ளீடிங் அதிகமில்லாதபோது எதற்கு நாப்கினை வேஸ்ட் பண்ண வேண்டும்… 7-8 மணி நேரத்துக்கொரு நாப்கின் உபயோகிக்கக்கூடாதா?’ என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அது சரியானதல்ல. எனவே, பீரியட்ஸின் போது இன்ஃபெக்ஷன் ஏற்படாமல், உங்களை ஆரோக்கியமாக, சுகாதாரமாக வைத்துக்கொள்ள விரும்பினால், ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல நான்கு முதல் ஐந்து மணி நேரத்துக்கொரு முறை நாப்கினை மாற்றிவிடுங்கள். பத்து நாப்கின்களுக்கும் மேல் அதிகரிக்கும் பட்சத்தில் மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.