ஐதராபாத்: விதிகளுக்குப் புறம்பாக ஏரியை அழித்து கட்டிடம் எழுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், நடிகர் நாகர்ஜுனாவுக்கு சொந்தமான பிரம்மாண்ட அரங்கை இடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நடிகர் நாகர்ஜுனாவுக்கு சொந்தமான N-Convention மையத்தை ஹைதாராபாத் பேரிடர் மேலாண்மை முகமை இடித்து வருகிறது. இதனால் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாதப்பூரில் உள்ள இந்த அரங்கு 27 ஆயிரம் சதுர அடியில், 3000 பேர் அமரக் கூடிய வகையில் நிறுவப்பட்ட ஒரு பிரம்மாண்ட அரங்காகும்.
N Convention என்ற பெயரிலான இந்த அரங்கை N 3 என்டர்ப்ரைசஸ் கட்டியெழுப்பியது. இந்த N 3 என்டர்ப்ரைசஸ் நடிகர், தயாரிப்பாளர் நாகர்ஜுனா அக்கினேனி மற்றும் நல்லா ப்ரீத்தம் இணைந்து நடத்தும் நிறுவனம். இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் அரங்கத்துக்கு வந்த ஹைதராபாத் பேரிடர் மீட்பு, இயற்கை அரண்கள் கண்காணிப்பு, பாதுகாப்பு முகமை (HYDRAA) கட்டிடத்தை இடிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
நாகர்ஜுனாவின் என் கன்வென்ஷன் அரங்கம் தும்மிடிகுண்டா ஏரியின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் மழை நீர் வடிகால் தடைபட்டு மழை பெய்யும் போதெல்லாம் 100 அடி சாலை, ஐயப்பா காலனி மற்றும் பிற பகுதிகள் வெள்ளக்காடாக ஆகின்றன என்ற புகாரின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் பேரிடர் மீட்பு, இயற்கை அரண்கள் கண்காணிப்பு, பாதுகாப்பு முகமை (HYDRAA) கடந்த ஜூலை 17-ல் தான் உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பு இயங்க ஆரம்பித்த பின்னர் மேற்கொள்ளப்படும் முதல் பெரிய நடவடிக்கையாக இது அறியப்படுகிறது.