ஒப்பந்த பணியாளர்களுக்கான வலுவான வேலை சட்டம்… பெண்களுக்கு ஏன் முக்கியம்? | Gig Workers

கொரோனா நம் அனைவரது வாழ்க்கையையும், பணிச் சூழலையும் மாற்றிவிட்டது. நம் பணியில் நிறைய மாற்றங்களைப் பார்த்திருப்போம். அதில் ஒன்றாகப் புதிதாக உருவாகியிருப்பதுதான்… கிக் (Gig) வேலைவாய்ப்பு. அதாவது, குறுகியக்கால பணிகள், அதற்கேற்ற ஊதியம். நமக்குத் தெரிந்த மொழியில் சொல்ல வேண்டுமானால் Freelancing, contract work என்று கூறலாம்.

இன்றைய கால ஓட்டத்தில் கிக் பணியாளர்கள் அதிகரித்துவிட்டனர். குறிப்பாக, பெண்கள் தங்கள் குடும்பத்தைக் கவனித்துக்கொண்டு மீதமிருக்கும் நேரத்தில் தங்களுக்கு ஏற்ற துறையில் கிக் பணியாளர்களாக இணைந்து வேலை செய்யலாம். இப்படியான கிக் வேலைகள் உலகம் முழுவதும் பெரிதும் வளர்ந்து வருகின்றன.

பெங்களூரு, அர்பன் கம்பெனியை சேர்ந்த அழகு நிலைய கிக் (contract worker) தொழிலாளர்கள் கடந்த ஜூன் மாதம் மாபெரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் நிறுவனம் நியாயமற்ற முறையில் தங்களிடம் நடந்துகொள்வதாகவும், சிறிய காரணங்களுக்காக ஐடி பிளாக் செய்யப்படுவதாகவும், தொழிலாளர்களைக் கலந்தாலோசிக்காமல் புதிய சேவை விதிமுறைகளைக் கொண்டுவருவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

Gig Workers

“இங்கு வேலை செய்யும் பெரும்பாலானவர்கள் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் இருக்கிறோம். நான் 2019-ல் அர்பன் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தபோது, அது எங்களுக்கு நெகிழ்வான வேலை நேரமாக இருந்தது. ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை. ஆனால், இப்போது தினமும் 10 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்கிறோம். அதுவே, விடுமுறை நாள்களில் 13 மணி நேரம் வரை வேலை நீடிக்கும். இதற்காக எங்களுக்குக் கூடுதல் ஊதியம் எதுவும் கிடைப்பதில்லை. நிறுவனத்தின் பொருள்களை நாங்கள் கட்டாயம் விற்பனை செய்தாக வேண்டும். பணியில் எதிர்பாராத விதமாகச் சிறு தவறு செய்தாலும் ஐடி பிளாக் செய்யப்படும்.

சில சமயங்களில் வெளி இடங்களுக்கு மேக்கப் செய்ய எங்களை அனுப்புவார்கள். அப்போது எங்களால் செல்ல இயலுமா என்றெல்லாம் நிறுவனம் கேட்காது. அன்றைக்கு எங்களுக்குப் பணிக்கப்பட்ட வேலையை எவ்வளவு தொலைவாக இருந்தாலும் நாங்கள் கட்டாயம் முடித்தே ஆக வேண்டும். இன்னும் சில சமயங்களில் எங்கள் பயணத்தில் சவால்கள் இருந்து எங்களால் குறிப்பிட்ட இடத்துக்குச் செல்ல முடியவில்லை என்றாலும் எங்கள் ஐடி பிளாக் செய்யப்படும். இந்த நிலையில்தான் எங்கள் நிறுவனம் புதிய ஊழியர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறது. ஏற்கெனவே பணியில் உள்ள எங்களுக்கு வேலைகள் கிடைப்பது கடினமாக உள்ளது. இதனால் எங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படுகிறது.

பணி நீக்கம் (Dismissal)

நிறுவனம் தொழிலாளர்கள் மீது சிறிதும் அக்கறை காட்டவில்லை. எங்களால் ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்யமுடியவில்லை என்றால் அடுத்ததாக அவர்கள் தரப்பிலிருந்து கூறுவது ‘ பணி நீக்கம்’ என்ற ஒற்றை வார்த்தைதான்” என்று தன் மனக் குமுறல்களைக் கொட்டித்தீர்த்துள்ளார் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு அழகுக்கலை நிபுணர்.

நிறுவனம் தங்களின் பங்களிப்புகளை அங்கீகரித்து நியாயமான முறையில் நடத்த வேண்டும் எனக் கோருகின்றனர் அதன் ஊழியர்கள். ஹைதராபாத் மற்றும் டெல்லி போன்ற நகரங்களிலும் அர்பன் கம்பெனிக்கு எதிராக இதே போன்ற போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

கிக் பணியாளர்கள் நம் சமூகத்தில் ஏன் முக்கியம்?

நமது சமூகத்தில் தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன், வேலைசெய்யும் முறைகளில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்கள் மூலம் வேலைவாய்ப்புகள் விரைவாக மற்றும் எளிதாகக் கிடைக்கின்றன. இதனால், தொழிலாளர் சந்தையில் கிக் பணியாளர்கள் என்கிற புதிய நிலை தோன்றியுள்ளது. இதன் மூலம் பலரும் தங்கள் நேரத்தைப் பயனுள்ள முறையில் பயன்படுத்தி, நிதி தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர். இதனால் அரசுக்கும் லாபம் கிடைக்கும்.

கிக் பணியாளர்களுக்கான மசோதா..!

கிக் பணியாளர்கள் நல மசோதாவை நிறைவேற்றிய இந்தியாவின் முதல் மாநிலம் ராஜஸ்தான். கிக் பணியாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு, தொழிலாளர்களைப் பதிவு செய்தல், அவர்களின் நலன்கள் போன்ற பல்வேறு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கிக் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ராஜஸ்தானைத் தொடர்ந்து கர்நாடகா, தெலங்கானா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களும் இந்த மசோதாக்கள் மற்றும் கொள்கைகளைப் பின்பற்றியுள்ளன.

அடுத்த சில ஆண்டுகளில் கிக் வேலைகளின் அளவு அதிகரிக்கும் என்பதை மனதில் வைத்து இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. நம் வழக்கமான தொழிலாளர் சட்ட விதிகளுக்கு முற்றிலும் அப்பாற்பட்டது கிக் சட்ட மசோதா. இதில் முதலாளி – பணியாளர் என்ற நடைமுறையே கிடையாது, பணியாளர் என்ற வரைமுறை மட்டுமே உள்ளது.

கிக் பணியாளர்கள் சந்திக்கும் சவால்கள்!

கிக் பணியாளர்களுக்கு நிலைத்த வேலைவாய்ப்பு இல்லை, அடிக்கடி தங்கள் வேலையை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். இதனால் அவர்களுக்கு நிதி பாதுகாப்பின்மை ஏற்படுகிறது. இவர்களுக்கு அரசு நலன்கள் இல்லை. காப்பீடு, ஓய்வூதியம் என எதுவும் கிடையாது. இந்தியா முழுவதும் உள்ள கிக் பணியாளர்கள் குறைந்த சம்பளம் மட்டுமே பெறுகின்றனர்.

பணி, நிதி பாதுகாப்பின்மை

கிக் பணியாளர்களின் உரிமைகள்!

வளர்ந்து வரும் நம் நாட்டில் கிக் பணியாளர்களின் உரிமைகளை முன்னெடுப்பது ஒரு முக்கியமான விவாதமாக மாறியுள்ளது. தொழிலாளர் உரிமைகள் மற்றும் நலன்களைக் காப்பாற்றும் சட்டங்கள், சமூகப் பாதுகாப்பு, அரசு சார்பாகக் கிடைக்க வேண்டிய நலன்களை வலியுறுத்த வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. கிக் பணியாளர்கள் சந்திக்கும் சவால்களைத் தீர்க்கவும் அதில் பணியாற்றும் பெண்களுக்காகவும் அனைத்து மாநில அரசுகளும் கிக் பணியாளர் மசோதாக்களைக் கொண்டுவர வேண்டும் என துறை சார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கிக் பணியாளர்கள் இன்று உலகில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். குறிப்பாக, அதிலுள்ள பெண்களின் நிலையை மேம்படுத்துவதற்காக வேலைவாய்ப்பு பாதுகாப்பு, போதிய சம்பளம் மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்படுவது அவசியம். இவையெல்லாம் கிக் பணியாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்.

தமிழில்: சத்யா கோபாலன்

மூலம்: ஸ்ரீஹரி பாலியத் – இண்டியா ஸ்பெண்ட்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.