புதுடெல்லி: ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அரசு ஊழியர்களின் நிதி பாதுகாப்பை உறுதி செய்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை செயல்படுத்த அவரது தலைமையிலான அமைச்சரவை சனிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
“தேசத்தின் முன்னேற்றத்துக்காக கடுமையாக உழைக்கும் அரசு ஊழியர்களை எண்ணி பெருமை கொள்கிறேன். அவர்களது கண்ணியத்தையும், நிதி பாதுகாப்பையும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் உறுதி செய்கிறது. அவர்களது நலன் சார்ந்தும், எதிர்காலம் சார்ந்தும் இந்த அரசு கொண்டுள்ள உறுதியான நிலைப்பாட்டை இது பிரதிபலிக்கிறது” என பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் வரும் 2025-ம் ஆண்டு, ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 25 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர், ஓய்வு பெறுவதற்கு முன் 12 மாதங்களில் பெற்ற அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக இதன் மூலம் பெற முடியும்.
ஓய்வூதியம் பெறும் ஊழியர் இறந்துவிட்டால், அவர் பெற்ற ஓய்வூதியத்தில் 60 சதவீதம் அவரது குடும்பத்திற்கு, குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் 23 லட்சம் ஊழியர்கள் பலன் பெறுவார்கள் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.