கீவ்: போலந்து நாட்டில் இருந்து உக்ரைன் தலைநகருக்கு பிரதமர் மோடி சிறப்பு ரயிலில் பயணம் செய்தார். உக்ரைன் நாட்டின் ரயில் வழித்தடம் 24,000 கி.மீ. நீளம் கொண்டதாகும். உலகில் மிக நீளமான ரயில் வழித்தடங்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் அந்த நாடு12-வது இடத்தில் உள்ளது. உக்ரைனின் ரயில் வழித்தடங்கள் மீதுரஷ்ய ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன்காரணமாக இதுவரை 400-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யா, உக்ரைன் இடையே நட்புறவு நீடித்தபோது உக்ரைன் ரயில்வே சார்பில் கிரீமியா பகுதிக்கு சொகுசு ரயில் இயக்கப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டில் கிரீமியா பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. இதன்பின் சொகுசு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. கடந்த 2022-ம்ஆண்டில் உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் தொடுத்தது.
அந்த நேரத்தில் கிரீமியாவுக்கு இயக்கப்பட்ட சொகுசு ரயிலில் ஏவுகணை தடுப்பு சாதனங்கள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்களை உக்ரைன் ராணுவம் பொருத்தியது.
இந்த ரயில் தற்போது போலந் தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள பிரைஸ்மைசெல் கிளவுனி நகரில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவுக்கு இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போலந்தில் இருந்து கீவுக்கு இந்த ரயிலில் பயணம் செய்தார். அப்போது ரயிலுக்கு ‘ரயில் போர்ஸ் ஒன்’ என்று பெயர் சூட்டப்பட்டது.
பொதுவாக போலந்தில் இருந்துகீவ் நகருக்கு ‘ரயில் போர்ஸ் ஒன்’ ரயிலில் பயணம் செய்ய 8 மணிநேரமாகும். எனினும் உலக தலைவர்கள் இந்த ரயிலில் பயணம் செய்யும்போது பாதுகாப்பு கருதிகூடுதல் நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி ‘ரயில் போர்ஸ் ஒன்’ ரயிலில் 10 மணி நேரம் பயணம் செய்து கீவ் நகரை சென்றடைந்தார்.
ரஷ்ய ராணுவ தாக்குதலால் மின்சார கட்டமைப்புகள் கடுமை யாக சேதமடைந்து உள்ளன. இதன்காரணமாக டீசல் இன்ஜின் மூலம் ‘ரயில் போர்ஸ் ஒன்’ இயக் கப்படுகிறது. ஆலோசனை கூட்டம் நடத்துவதற்காக ரயில் பெட்டியில் பெரிய மேஜை வசதி செய்யப்பட்டு உள்ளது. சொகுசு சோபா, பெரியதொலைக்காட்சி பெட்டி, சொகுசு படுக்கை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. குண்டு துளைக்காத ஜன்னல்களும் ரயில் பெட்டிகளில் பொருத்தப்பட்டுள்ளன.
ரயில் செல்லும்போது வான் வழிபாதுகாப்பும் உறுதி செய்யப்படு கிறது. ஜோ பைடன் தவிர பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்கள், ‘ரயில் போர்ஸ் ஒன்’ ரயிலில் பயணம் செய்துள்ளனர். இந்த வரிசையில் பிரதமர் நரேந்திர மோடியும் இணைந்துள்ளார்.