ஜல்னா: மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னாவில் உள்ள மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சி கழகம் (எம்ஐடிசி) பகுதியில் உள்ள எஃகு தொழிற்சாலையின் கொதிகலன் வெடித்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயமடைந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்துக் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஜய் குமார் பன்சால் கூறுகையில், “கஜ் கேசரி இரும்பு ஆலையில் மதியம் கொதிகலன் வெடித்து விபத்துக்குள்ளானதில் இரும்பு உருகி, தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில் மூன்று தொழிலாளர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது” என்று தெரிவித்தார். அந்த மூன்று தொழிலாளர்களும் சத்ரபதி சம்பாஜிநகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மற்றொரு அதிகாரி கூறுகையில், “அந்த தொழிற்சாலையில் கழிவுகளில் இருந்து இரும்புக் கம்பிகள் தயாரிக்கப்படுகின்றன. விபத்துக்குள்ளான தொழிலாளர்களிடம் இருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. தனியார் தொழிற்சாலையின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.