வலி நிவாரணிகள் உள்ளிட்ட 156 வகையான கூட்டு மருந்துகளுக்கு மத்திய அரசு தடை

புதுடெல்லி: வலி நிவாரணிகள் உள்ளிட்ட 156 வகையான கூட்டு மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக சமீபத்தில் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு: காய்ச்சல், சளி போன்றவற்றுக்கான வலி நிவாரணிகள், மல்டிவைட்டமின்கள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள்(antibiotics) என பொதுவாகவும் பரவலாகவும் அளிக்கப்படும் 156 வகையான கூட்டு மருந்துகள் தடை செய்யப்படுகின்றன. Fixed Dose Combination (FDC) வகையைச் சேர்ந்த மருந்துகளான Amylase, Protease, Glucoamylase, Pectinase, Alpha Galactosidase, Lactase, Beta-Gluconase, Cellulase, Lipase, Bromelain, Xylanase, Hemicellulase, Malt diastase, Invertase, Papain ஆகியவை மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். அதேநேரத்தில் இதற்கான பாதுகாப்பான மாற்று மருந்துகள் உள்ளன.

ஒன்றுக்கும் மேற்பட்ட மருந்துகளுடன் இணைந்த மருந்துகள் FDC மருந்துகள் என அழைக்கப்படுகின்றன. இத்தகைய மருந்துகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு நிபுணர் குழுவை அமைத்தது. இந்த நிபுணர் குழு நடத்திய ஆய்வில், FDC வகை மருந்துகளில் நோயை குணப்படுத்தும் கூறுகள் இல்லை என்பது தெரியவந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

FDC மருந்துகள் குறித்து ஆய்வு நடத்திய மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (Drugs Technical Advisory Board), ‘FDC மருந்துகள் நிவாரணம் தரக்கூடியவை என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. அதோடு அவை மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். எனவே, பொது நலன் கருதி, மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் 1940ன் பிரிவு 26A-ன் கீழ், FDCயின் உற்பத்தி, விற்பனை அல்லது விநியோகத்தைத் தடை செய்வது அவசியம்’ என்று பரிந்துரைத்துள்ளது. எனவே, இத்தகைய மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யக்கூடாது” என்று கூறப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட மருந்துகளின் பட்டியலில் முடி சிகிச்சைகள், தோல் பராமரிப்பு, ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகள் ஆகியவையும் அடங்கும். மேலும், மொத்தம் 34 மல்டிவைட்டமின்கள் குறித்து தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.