சென்னை: “விமர்சனங்கள் தேவை. அவை மழை போல இருக்க வேண்டும். புயல் போல இருக்கக் கூடாது. மற்றவர்கள் மனதை நோகடிக்கக் கூடாது. கருணாநிதி குறித்து படம் எடுக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். துரைமுருகன் என்று ஒருவர் இருக்கிறார். கருணாநிதி கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர். அவரை சமாளிப்பது கடினம். அந்த வகையில் ஸ்டாலினுக்கு எனது ஹாட்ஸ் ஆஃப்” என நடிகர் ரஜினி ஜாலியாக பேசினார்.
அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ’கலைஞர் எனும் தாய்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினி, “இப்போதுதான் அரசியலில் நுழைந்து கடினமான உழைத்து, பேச்சில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி கொண்டு, மக்கள் மத்தியில், தொண்டர்கள் மத்தியில் அருமையான, பெயர், புகழ் பெற்று, அரசியலில் தனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என நிரூபித்துக் கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
ஏவி விட்டால்தான் எல்லோரும் வேலை செய்கிறார்கள். ஆனால் ஏவி விடாமலே வேலை செய்பவர் எ.வ.வேலு. இதனை நான் சொல்லவில்லை. கருணாநிதி சொன்னார். கருணாநிதியின் நூற்றாண்டு விழா தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. உலகத்தில் யாருக்கும் இப்படி கொண்டாட மாட்டார்கள். மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல வேலைகளை கடந்து முதல்வர் தலைமை தாங்கி நடத்தி இருக்கிறார்.
மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆன பிறகு, அவர் சந்தித்த எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார். இது அவரது ஆளுமையை வெளிப்படுத்தும் விஷயம். முதல்வர் பதவியை கட்டிக் காக்க பக்கத்து மாநிலங்களில் எத்தனை கஷ்டப்படுகிறார்கள் என்பது நமக்கு தெரியும். ஆனால், அதனை சாதாரணமாக கையாள்கிறார் ஸ்டாலின். பள்ளியில் புதிய மாணவர்களை சமாளிப்பது எளிது. ஆனால், பழைய மாணவர்களை சமாளிப்பது கஷ்டம். இங்கே ஏகப்பட்ட பழையவர்கள் இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் சமாளிப்பது சாதாரண விஷயமல்ல. துரைமுருகன் என்று ஒருவர் இருக்கிறார். கருணாநிதி கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர் அவர். அந்த வகையில் ஸ்டாலினுக்கு எனது ஹாட்ஸ் ஆஃப்.
‘லால் சலாம்’ படத்துக்காக நான் திருவண்ணாமலை சென்றிருந்தபோது, எ.வ.வேலு கல்லூரியில் தான் தங்கினேன். மிகச் சிறப்பான அரவணைப்பு கிடைத்தது. அவருக்கு கைமாறாக என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. நல்லவேளை இந்த புத்தக விழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. புத்தக வெளியீட்டு விழாவுக்காக எ.வ.வேலு என்னை சந்தித்து பேசியது: நீண்ட நாட்களுக்கு முன் எழுதிய புத்தகம் இது. கருணாநிதியை சந்தித்து நான் சொன்னபோது, ‘யார கேட்டுயா இந்தப் புத்தகம் எழுதுன, உனக்கு வேற வேலையே கிடையாதா’ என திட்டினார். இந்தத் தலைப்பு கூட கருணாநிதி கொடுத்த தலைப்பு தான் என சொன்னார்.
கருணாநிதியின் அரசியல் வாழ்க்கை எல்லோருக்கும் தெரியும். அண்மையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கே, கருணாநிதி குறித்து அரைமணி நேரம் பேசினார். அது அவர் மட்டும் பேசியிருக்க மாட்டார். மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக்கும். எல்லாராலும் பாராட்டப்பட்ட அபூர்வமான மனிதர் அவர். ஒரு சிலர் தான் சமூகத்துக்கு, இனத்துக்காக போராடி பாடுபடுவர்கள். அதில் கருணாநிதி முக்கியமானவர். அவர் சந்தித்த சோதனைகள், விமர்சனங்களை வேறு யாராவது எதிர்கொண்டிருந்தால் காணாமல் போயிருப்பார்கள்.
விமர்சனங்கள் தேவை. அவை மழை போல இருக்க வேண்டும். புயல் போல இருக்கக் கூடாது. புயல் போல இருந்தால் மரங்களே சாய்ந்துவிடும். ஆனால் கருணாநிதி ஆலமரம். வேர் மிகவும் வலுவானது. உடன்பிறப்புகள் என்ற அவரது வேர்கள் மிகவும் வலிமையானவை. இல்லாவிட்டால், 12 வருடம் ஆட்சியில் இல்லாவிட்டால் கூட கட்சியை காப்பாற்ற முடியுமா? 5 வருடம் இல்லாவிட்டாலே திண்டாடுகிறார்கள். கருணாநிதி இறந்த பிறகு அவரது புகழ் வளர்ந்துகொண்டேயிருக்கிறது. அவர் குறித்து படம் எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். விமர்சனம் செய்யுங்கள். ஆனால், யார் மனதையும் நோகடிக்காதீர்கள்.
எப்போதும் சந்தோஷமாக இருக்கும் கருணாநிதி 2 தருணங்களில் மட்டும் சோகமாக இருந்ததை பார்த்துள்ளேன். ஒன்று முரசொலி மாறன் அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த தருணம். இரண்டாவது தருணம், ராஜ்குமாரை வீரப்பன் கடத்தி சென்றபோது, தலைமை செயலகத்தில் அவரை சந்தித்தபோது சோகமாக இருந்தார். அரசாங்கத்தையும், அரசையும், லஞ்சம் தொடர்பாக விமர்சித்த படம் ‘சிவாஜி’. அது குறித்து தெரியும் கருணாநிதி வந்து பார்த்தார். படத்தை பார்த்து கருணாநிதி சொன்னார், ‘நமக்கும் இதெல்லாம் ஒழிக்க வேண்டும், நல்லது செய்ய வேண்டும் என ஆசை’ என்று பெருமூச்சு விட்டு சொன்னார். வெற்றி விழாவிலும் கலந்துகொண்டு எல்லாரையும் புகழ்ந்தார். அது தான் தைரியம்” என்றார் ரஜினிகாந்த். வீடியோ லிங்க்…