`கூழாங்கல்’ இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜின் `கொட்டுக்காளி’, இயக்குநர் மாரி செல்வராஜின் `வாழை’ இரண்டு திரைப்படங்குகளும் நேற்று திரையரங்குகளில் வெளியாகி வரவேற்ப்பைப் பெற்று வருகின்றன.
இந்த இரண்டு திரைப்படங்களையும் பார்த்த பிரபல இயக்குநர்கள், நடிகர்கள், பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரித்து வருகின்றனர். அவ்வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி நடித்திருக்கும் ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தைப் பார்த்த நடிகர் கமல், தமிழ் சினிமாவின் நம்பிக்கை, எதிர்காலம் என்று பி.எஸ்.வினோத்ராஜை மனதாரப் பாராட்டியிருந்தார். தற்போது இயக்குநர் பாலாவும் ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தைப் பார்த்துப் பாராட்டியிருக்கிறார்.
சமீபத்தில் ‘வாழை’ படத்தின் பிரத்யேகக் காட்சி சென்னையில் பார்த்த இயக்குநர் பாலா, இயக்குநர் மாரி செல்வராஜைக் கட்டி அணைத்து, கண்ணீர் சிந்தி, உறைந்து நின்ற காணொலி சமூகவலைதளங்களில் வைரலாகியிருந்தது. இந்நிலையில் ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தைப் பாராட்டி கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கும் இயக்குநர் பாலா, “நம்முடைய தமிழ்த் திரைப்படத்துறையில் இருந்து, உலகம் வியக்கும் கலைஞர்கள் வந்து கொண்டே இருப்பார்கள் என்பதற்கான முக்கியமான சான்றுகளில் ஒன்று, இந்தக் ‘கொட்டுக்காளி’. ஆழமான இக்கதையை, எளிமையாகவும் வலிமையாகவும் எடுக்க முடியும் என்று களமாடி, ஓர் அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறார், இயக்குநர் வினோத்ராஜ்.
குறிப்பாக, சூரி… தனது கதாபாத்திரத்தை உணர்ந்து, ஆர்ப்பாட்டமும் அமைதியும் ஒரு சேர இணைந்த நடிப்பை வெளிப்படுத்தி, ஒரு நடிகராகத் திரையுலகில் ஆழச்சுவடு பதித்து தாண்டவமாடியிருக்கிறார் என்றால் அது மிகையாகாது. படத்தின் தலைப்பிற்கே நியாயம் சேர்க்கும் வகையில், மிக அழுத்தமான நடிப்பைத் தந்திருக்கிறார் நாயகி, அன்னா பென். படத்தில் நடித்திருக்கும் அனைவருமே, தாங்களும் ஒரு முக்கியக் கதாபாத்திரம்தான் என்று சவால்விட்டிருக்கிறார்கள்.
காட்சியை வழி நடத்திச் சென்ற ஒளிப்பதிவாளர் சக்திவேல், மிகவும் போற்றுதலுக்குரியவர். சிவகார்த்திகேயனுக்கு, வினோத்ராஜ் சார்பாக, எனது நன்றிகள். சூரி மற்றும் வினோத்ராஜ் போற்றப்பட வேண்டிய கலைஞர்கள் மட்டுமல்ல, கை கூப்பி வணங்கப்பட வேண்டியவர்கள். ‘கொட்டுக்காளி’ படக்குழுவினர் அனைவரும் உயர்ந்து நிற்கிறார்கள்” என்று பாராட்டியுள்ளார்.