டெஸ்லா – ஓர் அமெரிக்க நிறுவனம்தான். ஆனால், இந்தியர்கள் பலர், அதுவும் ஏகப்பட்ட தமிழர்கள் டெஸ்லா எலெக்ட்ரிக் கார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். அசோக் எள்ளுசாமி எனும் தமிழன்தான், டெஸ்லா கார்களின் ஆட்டோ பைலட் சிஸ்டத்துக்கும், அட்டானமஸ் டிரைவிங் சிஸ்டத்துக்கும் மூளை. லேட்டஸ்ட்டாகக் கூட, ஆரணியைச் சேர்ந்த டெஸ்லாவின் சீனியர் புராஜெக்ட் லீடர் காசி விஸ்வநாதன், நமது மோட்டார் விகடன் இதழுக்காகப் பிரத்யேகப் பேட்டியும் அளித்திருந்தார்.
ஸ்விட்சர்லாந்து மற்றும் ஆம்ஸ்டர்டாமில் பணிபுரியும் அவரிடம், அப்போதுதான் டெஸ்லாவில் பணிபுரிவதற்கு என்ன தகுதி வேண்டும் என்று கேட்டிருந்தோம். அதற்கு அடுத்த நாள்களிலேயே டெஸ்லாவிடம் இருந்து இப்படி ஒரு வேலை வாய்ப்பு அறிவிப்பு வந்திருக்கிறது.
‛ஒரு மணி நேரத்துக்கு 48$ (4,000 ரூபாய்) சம்பளம்’ என்று அறிவித்திருக்கிறார் டெஸ்லாவின் தலைவர் எலான் மஸ்க். அதாவது, ஒரு நாளைக்கு ரூ.28,000 வருகிறது. இதை மாதச் சம்பளமாகக் கணக்கிட்டால், சுமார் 8 லட்சம் ரூபாய் லம்ப்பாகக் கிடைக்கிறது.
இந்தப் பதவிக்குப் பெயர் Data Collection Operator. இதன் Nature of Job என்பது – டெஸ்லாவின் இன்ஜீனியர்களுடனும், ரோபோக்களுடனும் கலந்து டேட்டாக்களைச் சேகரித்து, எக்யூப்மென்ட் அதிகாரிகளுக்கு ஃபீட்பேக் அனுப்ப வேண்டும்.
இதற்கு முக்கியமான தகுதியாக டெஸ்லா சொல்லியிருப்பது என்ன தெரியுமா? வேலைக்கு அப்ளை செய்யும் நபர், ஒரு நாளைக்கு சுமார் 7 மணி நேரம் நடக்கும் அளவு உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும் என்பதுதான். இதற்கு உயர அளவுகளும் உண்டு. அவர் 5’7’’ மற்றும் 5’11’’ அடி உயரத்தில் இருந்தால் முன்னுரிமை.
2021-ல் Optimus என்கிற மனித ரோபோ திட்டத்தை அறிமுகப்படுத்தி இருந்தார் எலான்மஸ்க். டெஸ்லா தொழிற்சாலையில் பராமரிப்புப் பணிகள் முதல் டெக்னிக்கல் அம்சங்கள் வரை அனைத்து விஷயங்களையும் இந்த ஆப்டிமஸ் ரோபோ கவனித்துக் கொள்ளும். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த வேலைவாய்ப்பையும் அறிவித்திருக்கிறது டெஸ்லா.
டெஸ்லாவில் Motion Capture Suit என்கிற ஒரு டிரெஸ் கோடு உண்டு. அதை அணிந்துதான் இந்த வேலை பார்க்க வேண்டும். மேலும் VR (Virtual Reality) கண்ணாடியும் அணிய வேண்டும். இது சிலருக்கு செட் ஆகாது என்பதாலும், இதனால் VR Sickness எனும் நோய்க்கான அறிகுறிகளும் வருவதாலும், முதலிலேயே அதைச் சொல்லிவிடுகிறதாம் டெஸ்லா.
காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை; மாலை 4 முதல் இரவு 12.30 மணி வரை; நள்ளிரவு 12 மணி முதல் காலை 8.30 மணி வரை என மொத்தம் 3 ஷிஃப்ட்களாக இந்தப் பணி நடக்குமாம்.
Data Collection Operator வேலைக்கான விண்ணப்பங்கள் டெஸ்லாவின் வலைதளத்தில் கிடைக்கும். கலிஃபோர்னியாக்குக் கிளம்புறவங்க கிளம்புங்க!