புதுடெல்லி: இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் பட்டியலில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முதலிடத்தை பிடித்து உள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு 4-வது இடம் கிடைத்துள்ளது.
நாட்டில் சிறப்பாக பணியாற்றும் முதல்வர்கள் குறித்து ‘இண்டியா டுடே’ இதழ் அண்மையில் கருத்துக் கணிப்பை நடத்தியது. நாடு முழுவதும் 30 மாநிலங்களை சேர்ந்த 1,36,463 பேரிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டன.
இதில் 33 சதவீதம் பேர் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன்படி நாட்டின் சிறந்த முதல்வர்கள் பட்டியலில் அவர் முதலிடத்தை பிடித்து உள்ளார்.
சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஆதரவாக 13.8 சதவீதம் பேரும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக 9.1 சதவீதம் பேரும் வாக்களித்தனர். இவர்கள் முறையே 2, 3-வது இடங்களை பிடித்து உள்ளனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாக 4.7 சதவீதம் பேர் வாக்களித்து உள்ளனர். அவருக்கு 4-வது இடம் கிடைத்துள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு 4.6 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர். அவர் 5-வது இடத்தில் உள்ளார்.
செல்வாக்குமிக்க முதல்வர் யார்? – மக்களிடம் பிரபலமாக இருக்கும் செல்வாக்கமிக்க முதல்வர் யார் என்பது குறித்தும் இண்டியா டுடே கருத்துக் கணிப்பை நடத்தியது. இதில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா முதலிடத்தை பிடித்துள்ளார். அவருக்கு ஆதரவாக 51 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ஆகியோர் தலா 46 சதவீத வாக்குகளுடன் 2-வது இடத்தில் உள்ளனர். டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் 44%, தமிழக முதல்வர் ஸ்டாலின் 40%, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 39% வாக்குகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
12 சதவீதம் சரிவு: கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டில் இண்டியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு 47 சதவீதம் பேரும் கடந்த பிப்ரவரியில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 51 சதவீதம் பேரும் ஆதரவு அளித்தனர். அவரது செல்வாக்கு தற்போதைய கருத்துக் கணிப்பில் 12 சதவீதம் குறைந்துள்ளது.