மதுரை: ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி செய்து தந்தாலும், இரண்டு அடியில் தோண்டினால் கிடைக்கும் ஊற்றுநீரையே கொட்டாம்பட்டி அருகே வெள்ளிமலைப்பட்டி கிராம மக்கள் விரும்பி பருகுகின்றனர். கோடை காலம் உள்ளிட்ட எக்காலமும் இரண்டு அடியில் தண்ணீர் கிடைக்கும் நீர்வளம் நிறைந்திருப்பதற்கு அழகி அம்மன் அருள்தான் காரணம் என மக்கள் நம்புகின்றனர்.
மதுரை கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கேசம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமம் வெள்ளிமலைப்பட்டி. இது அழகர்மலையிலுள்ள வெள்ளிமலை அடிவாரத்தில் உள்ளதால் வெள்ளிமலைப்பட்டி என்ற பெயர் வந்தது. இங்கு முறிமலையும், பாறையும் இயற்கை அரணாக அமைந்துள்ளது.
இங்கு 450 குடியிருப்புகள் உள்ளன. விவசாயத்தை நம்பியுள்ள கிராமம். இங்குள்ள காளி குளம் ஊற்று நீரை மக்கள் பருகி வருகின்றனர். இதனை ஒட்டி பாறை பகுதிகளை ஒட்டியுள்ள இடங்களில் 2 அடியில் மண்ணைத் தோண்டினால் 2 அடியில் ஊற்று நீர் வருகிறது. இதனை சுவை மிகுந்த ஊற்றுநீரை மக்கள் விரும்பி வந்து குடங்களில் பிடித்து சமையலுக்கு பயன்படுத்துகின்றனர்.
இதுகுறித்து இக்கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக்ராஜா கூறுகையில், ஊராட்சி சார்பில் குடிநீர் வசதி செய்தாலும், வீடுகளில் ஆழ்துளை கிணறு வசதி செய்திருந்தாலும் எங்களுக்கு ஊற்றுநீர்தான் குடிநீர். மலை, குளம், பாறையை ஒட்டி எங்கு தோண்டினாலும் 2 அடியில் ஊற்றுநீர் கிடைக்கும். கோடைகாலத்தில் குளத்திற்குள் 2 அடியில் தோண்டினால் தண்ணீர் கிடைக்கும். திருமணமான புதுப்பெண்ணை மாமியார் இங்கு அழைத்துச் சென்று ஊற்றுநீர் எடுக்கும் வழக்கம் இன்றளவும் கடைபிடிக்கப்படுகிறது. கோடையிலும் தடையின்றி ஊற்றுநீர் வரக்காரணம் மலையடிவாரத்தில் அருள்பாலிக்கும் அழகி அம்மன் அருள்தான் காரணம் என கிராம மக்கள் நம்புகின்றனர். என்றார்.