தேனி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க கூட்டணியில் போட்டியிட்ட அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிவாரியாக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டங்களை நடத்தி வருகிறார்.
ஆண்டிப்பட்டியில் நடந்த கூட்டத்தில் பேசிய டி.டி.வி.தினகரன், “கடந்த 10 ஆண்டுகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் புழக்கம் பெருகி வருவதைப்போல, ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் கலாசாரமும் பெருகிவருகிறது. ஓட்டுக்கு 500, 1000 கொடுத்து ஜெயிக்கும் நிலை உள்ளது. ஓட்டுக்குப் பணம் கொடுத்து ஜெயிப்பதால்தான் அரசியல்வாதிகளின் ஊழல்களை தட்டிக்கேட்க முடியாத நிலையில் மக்கள் உள்ளனர். தேர்தலில் வென்ற பிறகு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், தேர்தலுக்கு செலவு செய்த பணத்தை அறுவடை செய்யும் வேலையில் ஈடுபடுகின்றனர்.
எடப்பாடி பழனிசாமியின் அகங்காரம், பதவி ஆசை, சுயநலத்தால் அ.தி.மு.க சின்னாப்பின்னமாகிவிட்டது. இரட்டை இலை சின்னத்திற்காகவே அ.தி.மு.க-வில் பல நிர்வாகிகள் உள்ளனர். நிர்வாகிகளை தவிர்த்து கட்சியில் தொண்டர்கள் அதிகம் இல்லை. தொடர்ச்சியாக 10 தேர்தல்களில் தோல்வியை சந்தித்தும் பழனிசாமி திருந்தவில்லை. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் அ.தி.மு.க-வை ஒருங்கிணைக்காவிட்டால் பழனிசாமி முடிவுரை எழுதி கட்சியை இழுத்து மூடிவிடுவார்.
தேனியில் போட்டியிட்ட நான் வாக்குக்குப் பணம் கொடுக்கக் கூடாது என முடிவு எடுந்திருந்தேன். வாக்குக்குப் பணம் கொடுக்காமல் ஜெயித்தால் தமிழகத்திற்கே முன்னுதாரணமாக அமையும். வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல்வாதிகளை மக்கள் கேள்வி கேட்கும் நிலை உருவாகும். ஆனால் என்னுடைய முடிவால் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் சோர்வடைந்திருந்தனர்.
கூட்டணிக் கட்சியினர் கூறியதால் அந்த முடிவை எடுக்கவில்லை. அப்படியிருந்தும் எனக்கு 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன. தவறானவர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்பது வாக்களித்தவர்களுக்கு தெரியும். எனக்காக வாக்களித்த தொகுதி மக்களுக்காக தொடர்ந்து உழைப்பேன். தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் 2 மாதங்களுக்கு ஒரு முறை தேனியில் வந்து தங்கி மக்கள் குறைகளை தீர்ப்பேன் என்றார், வரவில்லை.
ஆனால் இந்தப் பகுதி மக்களுக்காக உழைக்க வேண்டும் என்பதற்காக வீடு எடுத்து தங்கியிருக்கிறேன். நான் ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, போடியில் போட்டியிட போவதாகக் கூறுகிறார்கள். தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கின்றன. அதை கடைசி நேரத்தில் முடிவு செய்யலாம்.
மத்தியில் மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்துள்ளதால் தி.மு.க-வினர் பயந்துள்ளனர். மடியில் கனமாக உள்ளதால் மோடி முன் கை கட்டி தலை குனிந்து நிற்கிறார்கள். அதற்காகத்தான் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரை நாணய வெளியீட்டு விழாவுக்கு வரவழைத்தார்கள். ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து கல்வி முக்கியம் என்கிறார்.
ஆனால் பாடப்புத்தக விலையை உயர்த்துகிறார். ஜெயலலிதா மாணவர்களின் கல்விக்கடனை தள்ளுபடி செய்தார். வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க, மாணவர்களின் கடனை தள்ளுபடி செய்யவில்லை. அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவருவதாகக் கூறினர்… செய்யவில்லை. முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை. தமிழகத்தில் போதைப்பொருள்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. அதற்கு தி.மு.க-வினரே உடந்தையாக உள்ளனர்.” என்றார்.