புதுடெல்லி: மலையாளத்தில் யூடியூப் நியூஸ் சேனலை நடத்தி வருபவர் ஷாஜன் கரியா. கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ பி.வி.ஸ்ரீனிஜனை ‘மாபியா டான்’ என்று ஷாஜன் கரியா தனது வீடியோவில் விமர்சித்திருந்தார்.
ஸ்ரீனிஜன் எஸ்சி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், புகாரின் அடிப்படையில் ஷாஜன் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989-ன்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு விசாரணை நீதிமன்றத்தில் ஷாஜன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேபோல் உயர் நீதிமன்றமும் ஷாஜனின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து முன்ஜாமீன் முன்ஜாமீன் கோரி ஷாஜன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை விசாரித்து தீர்ப்பளித்தது.
அப்போது, ஷாஜன் கரியா சார்பில் ஆஜரான முத்த வழக்கறிஞர்கள் சித்தார்த் லுத்ரா மற்றும் கவுரவ் அகர்வால் ஆகியோர், “எஸ்சி, எஸ்டி சமூகத்தை சேர்ந்த ஒருவரை அவரது சாதி அல்லது தீண்டாமை குறித்த கருத்துகளை கூறாமல் உள்நோக்கம் இல்லாமல் வேறு வகையில் அவமானப்படுத்துவது. எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் குற்றமாகாது” என்று வாதிட்டனர். அந்த வாதத்தை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு, ஷாஜன் கரியாவுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.
மேலும், நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது: எஸ்சி, எஸ்டி சமூகத்தை சேர்ந்த ஒருவரை, அவமதிக்கும் எல்லாமே சாதி அடிப்படையில் இழிவுப்படுத்துவது போலாகாது. மேலும், மனுதாரர் (ஷாஜன்) வெளியிட்ட வீடியோ தனிப்பட்ட முறையில் ஸ்ரீனிஜனைப் பற்றியது. இதில் எஸ்சி, எஸ்டி சமூகத்தினருக்கும் வீடியோவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மனுதாரரின் இலக்கு ஸ்ரீனிஜனை மட்டுமே நோக்கியுள்ளதாக இருக்கிறது. எனவே, ஷாஜனுக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது.
ஐபிசி 500 பிரிவு: கண்டிக்கத்தக்க நடத்தை மற்றும் இழிவான கருத்தை கூறியதற்காக ஷாஜன் மீது ஐபிசி 500-வது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய அவதூறு குற்றத்தை செய்ததாகக் கூறலாம். அதன் அடிப்படையில் புகார்தாரர் வழக்கு தொடுக்கலாம். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.