பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் தேவகவுடாவின் பேரனான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகின. இதைத் தொடர்ந்து அவரது வீட்டு பணிப்பெண், மஜத கிராம பஞ்சாயத்து தலைவி உட்பட 5 பெண்கள் அவருக்கு எதிராக புகார் அளித்தனர்.
அதன்பேரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் கடந்த ஜூன் மாதத்தில் கைது செய்தனர். அவரது தந்தையும், முன்னாள் அமைச்சருமான எச்.டி. ரேவண்ணா மீதும் போலீஸார் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்தனர். ரேவண்ணா ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில், பிரஜ்வல் இன்னும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்துவரும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக 4 குற்றப்பத்திரிகைகளை நேற்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
ஒவ்வொரு குற்றப்பத்திரிகையும் சுமார் 1,500 முதல் 2,500 பக்கங்கள் வரை உள்ளது. அடுத்த சில தினங்களில் எஞ்சியுள்ள ஒரு வழக்கிலும் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.