சென்னை: பொறியியல் கல்லூரிகளில் போலி பேராசிரியர் நியமன விவகாரத்தில்யார் தவறு செய்திருந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
தனியார் அமைப்பு சார்பில் கல்வி மேம்பாட்டுக்கான கருத்தரங்கம், சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்சிசி பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி பேசியதாவது:
தமிழகத்தில் பொது மக்களுக்கு கல்வி கொடுத்ததில் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு பெரும் பங்கு உள்ளது. குறிப்பாக அன்றைய காலகட்டத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் படித்தவர்கள் அதிகமாக இருந்தனர். அதற்கு மிக முக்கிய காரணம் அங்கு இருந்த கிறிஸ்தவ மிஷனரிகளே.
இதன் காரணமாகத்தான் மறைந்த முதல்வர் கருணாநிதி, தனது ஆட்சி காலத்தில் சிறுபான்மையினர் நலவாரியம் அமைத்து பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தார். சிறுபான்மையினருக்காக திமுகதான் அதிகம் உழைத்துள்ளது என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. தொடர்ந்து தற்போது ‘நான்முதல்வன்’, காலை சிற்றுண்டி, புதுமைப் பெண், தமிழ் புதல்வன்திட்டம் என பல்வேறு நலத்திட்டங்களை மாணவர்களுக்காக முதல்வர் ஸ்டாலினும் செய்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில் பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், திமுக எம்.பி. வில்சன் உட்பட பலர் பேசினர்.
தொடர்ந்து அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘இந்தியாவிலேயே கல்வி வளர்ச்சியில் முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் போதை பொருள் விற்பனை செய்தால் கடும் தண்டனை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
போதை கலச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். பொறியியல் கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.